ஒரே நாளில் இத்தனை கோடி நிதியா? அமெரிக்காவில் வரலாறு படைக்கும் கமலா ஹாரிஸ் ..!
அமெரிக்கா : அமெரிக்க தேர்தலில் களமிறங்கவிருக்கும் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் தேர்தல் பரப்புரைக்காக நிதி திரட்டியுள்ளார்.
அமெரிக்காவில் இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக புதிதாக களமிறங்க இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பல நன்கொடையாளர்களிடமிருந்து மொத்தமாக 81 மில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது 81 மில்லியன் டாலரை இந்திய ரூபாய் மதிப்பில் சொல்லப்போனால் சுமார் ரூ.677 கோடி என்று கூறப்படுகிறது.
இதில் பெரும்பாலானவர்கள் முதல் முறையாக இந்த தேர்தலுக்காக நிதி அளித்துள்ளனர். இதனால் கமலா ஹாரிஸ் அமெரிக்கா தேர்தல் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் களம் காணும் எந்த ஒரு வேட்பாளரும் 24 மணி நேரத்தில் இந்த அளவுக்கு ஒரு பெரிய தொகையை திரட்டியதில்லை என்றே அமெரிக்க தரவுகளின் அடிப்படையில் கூறுகின்றனர்.
மேலும், திரட்டிய நிதியை ஆராய்ந்து பார்க்கையில் இதில் 60 சதவிகிதத்தினர் 2024 தேர்தலில் முதல் முறையாக நிதி அளிப்பவர்கள் என்றே உறுதி செய்யப்பட்டுள்ளது. இது போன்ற திடீர் எழுச்சியும் மற்றும் வரலாறு காணாத ஆதரவும் கமலா ஹாரிஸ் நிச்சயமாக இந்த தேர்தலில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளதென தேர்தல் பரப்புரைக்கான செய்தித் தொடர்பாளரான கெவின் முனோஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனநாயக கட்சி இதுவரையில் கமலா ஹாரிஸ் தான் அடுத்த அதிபர் வேட்பாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதை தொடர்ந்து அடுத்த மாதம் நடக்கும் கட்சி மாநாட்டில் தான் யார் வேட்பாளர் என்பது குறித்து அறிவிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஜோ பைடனும் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸை தாம் ஆதரிப்பதாக வெளிப்படையாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.