ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து நான் விலக வேண்டுமா?’ கருத்துக்கணிப்பு கேட்ட எலான் மஸ்க்.!
ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து நான் விலக வேண்டுமா என்று அதன் தலைவர் எலான் மஸ்க், பயனர்களிடம் கேட்டுள்ளார்.
ட்விட்டரின் தலைமை நிறுவனரான எலான் மஸ்க், பயனர்களிடம் இன்று ட்விட்டரில் ஒரு கருத்துக்கணிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார். அந்த கருத்துக்கணிப்பில் தான் ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து நான் விலக வேண்டுமா? என்று கேட்டுள்ளார். மேலும் இதன் முடிவுக்கு தான் கட்டுப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.
ட்விட்டர், எலான் மஸ்க் தலைமையின் கீழ் வந்தபிறகு மஸ்க் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளுக்காக அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தார். ட்விட்டரின் 50% சதவீத பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர், ட்விட்டரின் போலிக்கணக்குகளை முடக்குவதற்காக மஸ்க், சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன் முடிவாக ப்ளூ டிக் சந்தாதாரர் முறைக்கு மாதம் பணம் செலுத்த வேண்டும் என அதிரடி உத்தரவு விடுத்தார். மேலும் ட்விட்டரில் தடை செய்யப்பட்ட நபர்களை மீண்டும் ட்விட்டரில் அனுமதித்தார். இந்த நடவடிக்கைகளுக்காக மஸ்க், விமர்சிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மஸ்க், பதிவிட்ட ட்விட்டர் கருத்துக்கணிப்பில், பதிவான 88 லட்சம் வாக்குகளில் 56.7% வாக்குகள் மஸ்க்கிற்கு எதிராக அதாவது அவர் பதவி விலக வேண்டும் என வாக்களித்துள்ளனர். 43.3% வாக்குகள் மட்டுமே மஸ்க்கிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.