அமெரிக்க இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு..! 12 பேர் படுகாயம்..!
அமெரிக்காவின் லூசியானாவில் உள்ள இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்கா: லூசியானாவின் பேடன் ரூஜி பகுதியில் உள்ள டியோர் பார் என்ற இரவு விடுதியில் தூப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் விடுதியில் இருந்த 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 12 பேர்களில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார். அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த மூன்று போலீஸ் அதிகாரிகள் ஆம்புலன்ஸ் வரும் வரை மருத்துவ உதவிகளை வழங்கினார்.
இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதல் ஒருவரை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும் அருகில் இருந்தவர்கள் இதனால் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் மேலும் தெரிவித்தனர்.