அமெரிக்காவில் துப்பாக்கி சூடு.! 22 பேர் உயிரிழப்பு.!
அமெரிக்காவில், மைனே மாகாணத்தில், லூயிஸ்டன் நகரத்தில் நேற்று (புதன்) இரவு வணிகவளாகத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இதுவரை 22 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
லூயிஸ்டன் நகர வணிக வளாகத்தில் உள்ள பார், உணவகம், சூப்பர் மார்க்கெட் என மக்கள் அதிகம் கூடும் இடங்களை குறிவைத்து அந்த மர்ம நபர் நவீன ரக துப்பாக்கி கொண்டு சரமாரியாக சுட்டுள்ளான். சம்பவம் நடத்திய மர்ம நபர் இன்னும் கிடைக்கவில்லை என்றும், குற்றவாளி தலைமறைவாக இருப்பதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்.! வான்வெளி வெடிபொருள் பரிமாற்றம்.?
22 பேர் உயிரிழந்த இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை ஆண்ட்ரோஸ்கோகின் கவுண்டி பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விசாரணையில், வணிக வளாகத்தில் உள்ள அனைத்து கடைகளையும் பூட்டி வைக்க வேண்டும் என்றும், இன்னும் குற்றவாளி தலைமறைவாக இருப்பதால், குற்றவாளியை பிடிக்க வணிக வளாக கடை உரிமையாளர்கள் பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு தர வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
மைனே மாகாண ஆளுநர் ஜேனட் மில்ஸ் துப்பாக்கி சம்பவம் குறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிடுகையில், துப்பாக்கி சம்பவம் குறித்து அதிகாரிகள் தனக்கு தெரிவித்ததாக கூறினார். மேலும், லூயிஸ்டனில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பந்தமான, மைனே மாநிலத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் உள்ளூர் விசாரணை குழுவின் வழிகாட்டுதலைப் பின்பற்றுமாறு அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். நான் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, பாதுகாப்பு அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பேன். என்றும் மைனே கவர்னர் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.