UNCCD COP 15 மாநாட்டில் மண் அழிவை தடுக்க ‘3 – நிலை தீர்வை’ சமர்ப்பித்த சத்குரு…!
சத்குரு, ஐ.நாவின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பின் சார்பில் ஐவரி கோஸ்ட் நாட்டில் நடைபெற்று வரும் COP 15 மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
மண் வளத்தை பாதுகாப்பதற்காக 100 நாட்களில் 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள சத்குரு, ஐ.நாவின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பின் சார்பில் ஐவரி கோஸ்ட் நாட்டில் நடைபெற்று வரும் COP 15 மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். 195 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாட்டில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்கு மண்ணில் குறைந்தப்பட்சம் 3 முதல் 6 சதவீதம் கரிம வளத்தை உறுதி செய்வதற்கான தீர்வை சமர்ப்பித்தார்.
அதில் சத்குரு கூறியிருப்பதாவது:
உலகில் உள்ள அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளும் COP 15 மாநாட்டில் ஒன்று கூடி இருப்பது ஒரு முக்கியமான வாய்ப்பு. இதன்மூலம் உலகம் முழுவதும் உள்ள விவசாய நிலங்களின் மண் சீரழிவை மாற்றியமைக்கவும், மண் அழிவின் விளிம்பில் இருந்து மனித இனத்தை மீட்கவும் அரசாங்கங்களின் கொள்கை உருவாக்க முயற்சிகளை இரட்டிப்பாக்க முடியும்.
மண் வளப் பாதுகாப்பை பெரிய அளவில் கொண்டு செல்வதற்கு மக்களின் மனங்களில் அதை ஆழமாக பதிய வைக்க வேண்டும். நாம் சந்தித்து வரும் சூழலியல் பிரச்சினைகளை மிக எளிமையான வழிகளில் மக்களுக்கு புரியும்படி விளக்க வேண்டும். பிரச்சினைக்கான தீர்வுகளை எளிமையான வழிகளில், சுருக்கமாக ஒற்றை கவனத்துடன் கொண்டு செல்வதன் மூலமே வெற்றிகரமான மக்கள் இயக்கத்தை உருவாக்க முடியும்.
சிக்கலான அறிவியல் விஷயங்களை மக்களுக்கு புரியும்படி எளிய முறையில் கொண்டு செல்லாததன் விளைவாக பல சுற்றுச்சூழல் முயற்சிகள் தோல்விகளை சந்தித்ததை வரலாற்றில் பார்க்க முடியும். 1987-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ‘மோண்ட்ரியல் புரோட்டோகால்’ (Montreal Protocol) இப்போது வரை ஒரு வெற்றிகரமான சர்வதேச உடன்படிக்கையாக உள்ளது. அதற்கு காரணம், ஒரே ஒரு விஷயத்தை செய்வதன் மூலம் ஓசோன் படலம் பாதிப்புக்கு உள்ளாவதை தடுக்க முடியும் என்ற ஒற்றை நோக்கம் அதில் வலியுறுத்தப்பட்டது.
அதேபோல், மண் அழிவை தடுப்பதற்கு பல அறிவியல் நுணுக்கங்கள் உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு விதமான வேளாண் பருவநிலைகளும், வெவ்வேறு விதமான மண் வகைகளும் உள்ளன. மேலும், பொருளாதார மற்றும் கலாச்சார ரீதியான பாரம்பரிய வேறுபாடுகளும் உள்ளன. இருப்பினும், விவசாய நிலங்களில் மண்ணில் 3 முதல் 6 சதவீதம் கரிம வளம் இருக்க வேண்டும் என்ற ஒற்றை விஷயத்தை கட்டாயமாக்குவதன் மூலம் இந்த பிரச்சினைகளுக்கு எளிய தீர்வு காண முடியும். மண் வளமாகவும், வேளாண்மை நிலையாக நடக்கவும் இது தீர்வாக அமையும்.
விவசாய மண்ணில் 3 முதல் 6 சதவீதம் கரிம வளம் இருப்பதை உறுதி செய்வதற்கு பின்வரும் 3 நடைமுறைகளை செயல்படுத்த வேண்டும்…
1. கவர்ச்சிகரமான ஊக்கத்தொகைகளை வழங்குவதன் மூலம் தங்களது மண்ணில் குறைந்தப்பட்சம் 3 முதல் 6 சதவீதம் கரிம வளத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வத்தை விவசாயிகள் மத்தியில் உருவாக்க முடியும். இந்த ஊக்கத்தொகைகள் விவசாயிகள் மத்தியில் போட்டா போட்டியை உருவாக்க வேண்டும். இதை குறிப்பிட்ட வருடங்களுக்கு 3 கட்டங்களாக செயல்படுத்த வேண்டும். முதல்கட்டமாக, விவசாயிகளிடம் இது குறித்த ஆர்வத்தை உருவாக்க வேண்டும். இரண்டாம் கட்டமாக, அவர்களுக்கு ஊக்கத் தொகைகளை வழங்க வேண்டும், மூன்றாம் கட்டமாக, தேவைக்கேற்ப அந்த ஊக்கத்தொகைகளை குறைத்து கொள்ளலாம்.
2.விவசாயிகள் கார்பன் கிரெடிட் ஊக்கத்தொகைகள் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். இப்போது இருக்கும் நடைமுறைகள் மிகவும் சிக்கலாக உள்ளன.
3.3 முதல் 6 சதவீதம் கரிம வளம் கொண்ட மண்ணில் விளையும் பொருட்களுக்கு சிறப்பு தர அங்கீகாரம் அளிக்க வேண்டும். அந்தப் பொருட்களை உண்பதால், கிடைக்கும் மருத்துவ பலன்களையும், ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து மேம்பாட்டையும் மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். இதன்மூலம் மக்களின் ஆரோக்கியம் மேம்படும், உற்பத்தி பெருகும்.
காலம் கடந்து கொண்டே போகிறது. அதிர்ஷ்டவசமாக, நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். தேவையான அரசாங்க கொள்கைகளை உருவாக்குவதன் மூலம் மண் அழிவை தடுக்க முடியும். இதற்காக, 193 நாடுகளுக்கும் தனி தனியான கொள்கை குறிப்புகள் அடங்கிய கையேடுகளை மண் காப்போம் இயக்கம் வடிவமைத்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் Savesoil.org என்ற இணையதளத்தில் உள்ளது.
இதனை நாம் நிகழ செய்வோம்,
இவ்வாறு சத்குரு அதில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மண்ணை உயிருள்ளதாக அங்கீகரித்து அதை உயிர்ப்புடன் வைத்திருப்பதுதான் அதிமுக்கியமானது. உலகில் 85%க்கும் அதிக நாடுகள் இன்னும் மண்ணை உயிரற்ற பொருளாகப் பார்க்கின்றன. நாம் மண்காக்க விரும்பினால், இந்த அணுகுமுறை உடனடியாக மாறவேண்டும்” என தெரிவித்துள்ளார்.
The most important thing is to recognize soil as a living entity & keep it alive. More than 85% of the nations on the planet still look at soil as an inert substance. This approach must change immediately if we want to #SaveSoil. -Sg #UNited4Land #UNCCDCOP15 #SaveSoilAtCOP15 pic.twitter.com/1x5CxnUdKg
— Sadhguru (@SadhguruJV) May 11, 2022
மேலும், UNCCD அமைப்பின் பொதுச்செயலாளர் திரு. இப்ராகிம் தியாவ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்களுடைய செயல் உறுதிக்கு நன்றி சத்குரு” என பதிவிட்டுள்ளார்.
“Our problem is that 70% of land is ploughed and 4.2% is paved… The real fixing that we need is on agricultural land. Keep the soil alive: #UNCCDCOP15 needs to end with implementable action.” @SadhguruJV we are grateful of your commitment.#SaveSoil #LandLifeLegacy pic.twitter.com/uqzYGq61lY
— Ibrahim Thiaw (@ibrahimthiaw) May 10, 2022
மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து ‘மண் காப்போம்’ பயணத்தை தொடங்கிய சத்குரு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வழியாக மத்திய கிழக்கு நாடுகளை அடைந்துள்ளார். இவ்வியக்கம் உலகளவில் பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள் மற்றும் குடிமக்களிடம் இருந்து சிறப்பான ஆதரவையும் நன்மதிப்பையும் பெற்று வருகிறது.