சந்திராயன்-3க்கு போட்டியாக களமிறங்கும் ரஷ்யாவின் லூனா-25.! விறுவிறுப்பாகும் நிலவின் தென் துருவ பயணம்…
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கிய சந்திரயான்-3 விண்கலமானது கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு மேற்கொள்வதாக இரண்டாவது முறையாக இஸ்ரோ விஞ்ஞானிகளால் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த முறை சந்திராயன் 2 விண்கலத்தில் கிடைத்த அனுபவங்கள் மூலம் சிறு சிறு குறைகள் சரி செய்யப்பட்டு, சவால்களை சமாளிக்கும் வண்ணம் சந்திராயன்-3 விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது.
சந்திராயன்-3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி திட்டமிட்டபடி பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்து நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடர ஆரம்பித்து, சந்திராயன் சுற்றுவட்டபாதை குறைப்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு, நிலவின் டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதையில் செலுத்தபட்டது. சந்திராயன்-3 விண்கலமானது ஆகஸ்ட் 23ம் தேதி நிலவின் தென் துருவ மேற்பரப்பில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை போலவே, ரஷ்யாவும் நிலவின் தென் துருவத்திற்கு விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. கிட்டத்தட்ட 47 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு விண்கலத்தை ரஷ்யா அனுப்பவுள்ளது. நிலவின் தென் துருவத்திற்கு செல்லும் ரஷ்ய விண்கலமான லூனா-25-ஐ வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 11) அன்று விண்ணில் பாய உள்ளது.
லூனா-25 விண்கல திட்டமானது, ரஷ்யாவின் விண்வெளி தளமான வோஸ்டோச்னி காஸ்மோட்ரோம் மூலம் கடந்த 2021 அக்டோபர் மாதமே திட்டமிடப்பட்டது. உள்நாட்டு விவகாரம்,கொரோனா,உக்ரைன் போர் போன்ற சோதனை காலங்களால் லூனா-25 திட்டம் செயல்படுத்த இரண்டு ஆண்டுகள் தாமதமானது.
ரஷ்யாவின் விண்வெளித் தளமான வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து ஏவப்படும் லூனா -25 விண்கலமானது நிலவுக்குச் செல்ல ஐந்து நாட்கள் ஆகும். அங்கிருந்து நிலவில் தரை இறங்குவதற்கு முன்பு சந்திர சுற்றுப்பாதையில் ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை செலவிடும் என்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
லூனா -25 தரை இறங்கும் காலமும், சந்திராயன்-3 விண்கலமும் நிலவில் தரையிறங்கும் காலம் கிட்டத்தட்ட ஒரே நேரம் வரும் என்பது குறித்து லூனா -25 குழு கூறுகையில், சந்திராயன்-3 – லூனா-25 பயணங்கள் ஒன்றுக்கொன்று இடையூறாக இருக்காது. இரு விண்கலங்களும் வெவ்வேறு தரையிறங்கும் பகுதிகளை திட்டமிடப்பட்டிருப்பதால், இரண்டு பயணங்களும் ஒன்றுக்கொன்று வழியில் குறுக்கிடாது. நிலவில் அனைவருக்கும் போதுமான இடம் உள்ளது என லூனா -25 குழு தனியார் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது.
லூனா-25 நிலவில் ஒரு வருடத்திற்கு நிலவில் வேலை செய்யும். 1.8 டன் மொத்த எடை மற்றும் 31 கிலோ அறிவியல் உபகரணங்களை சுமந்து கொண்டு, லூனா-25 ஒரு ஸ்கூப்பைப் பயன்படுத்தி, 15 செமீ (6 அங்குலம்) ஆழத்தில் இருந்து பாறை மாதிரிகளை எடுத்து, உறைந்த நீரின் இருப்பை சோதிக்கும். இதன் மூலம் அங்கு மனிதர்கள் வாழ முடியுமா என ஆய்வு மேற்கொள்ளவும் ரஷ்யாவின் விண்வெளித் தளமான வோஸ்டோச்னி காஸ்மோட்ரோம் திட்டமிட்டுள்ளது.