நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு சென்ற லூனா-25.! தென்துருவ பயணத்தில் சந்திராயனை பின்தொடரும் ரஷ்யா.!
நிலவின் தென் துருவத்தை அடைய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கிய சந்திரயான்-3 விண்கலமானது கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
சந்திராயன்-3 விண்கலமானது, பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்து, நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு சென்று , அதன் சுற்றளவு குறைக்கப்பட்டு, தற்போது இறுதி கட்ட பாதையில் சந்திராயன்-3 செலுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து லேண்டர் பகுதி இன்று தனியே பிரிந்து செல்ல உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை போலவே, ரஷ்யாவும் நிலவின் தென் துருவத்திற்கு விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் களமிறங்கி, லூனா-25 எனும் விண்கலத்தை கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி விண்ணில் செலுத்தியது.
விண்ணில் செலுத்தப்பட்ட லூனா-25யானது, வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி நிலவில் தரையிறங்கும் என ரஷ்யாவின் விண்வெளித் தலைவர் யூரி போரிசோவ் தெரிவித்தார். ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ், ஆகஸ்ட் 23 தேதி தரையிறங்கும் என ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தது. 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையில் தரையிறங்க ஏதுவான நேரத்தில் நிலவில் லூனா-25 தரையிரங்கும் என கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று லூனா-25 விண்கலமானது பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து சந்திரனின் சுற்றுவட்ட பாதைக்கு செலுத்தப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
லூனா-25 விண்கலமானது, சந்திரனின் தென் துருவத்தில் ஒரு வருடம் செயல்படும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தில் நீர் உள்ளதா உள்ளிட்ட முக்கிய ஆய்வுக்காக ரஷ்யா லூனா-25ஐ விண்ணில் செலுத்தியுள்ளது.