வாக்னர் படை தலைவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ரஷ்ய அதிபர் புதின்.!
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு துணையாக போரிட்ட முக்கியமான படை வாக்னர் படை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாக்னர் படை தலைவர் ப்ரிகோஜின் திடீரென ரஷ்யாவுக்கு எதிராக தனது படையினை செயல்படுத்த துவங்கினார். இதனால் ரஷ்யாவில் உள்நாட்டு போர் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த புதன் கிழமை நடந்த விமான விபத்தில் விமானத்தில் பயணித்த 7 பயணிகள் 3 விமானிகள் என 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. உயிரிழந்தவர்களில் ஒருவர் வாக்னர் படை தலைவர் ப்ரிகோஜின் எனவும் ரஷ்ய ஊடகங்கள் தகவல் தெரிவித்தன. இவரது மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கல்/கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வாக்னர் படை தலைவர் ப்ரிகோஜின் மறைவு குறித்து ரஷ்ய அதிபர் புதின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டார். கிரெம்ளினில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி சந்திப்பின் போது புதின் பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.
விமான விபத்தை பொறுத்தவரை, முதலில் பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது எப்போதும் ஒரு சோகமான நிகழ்வுதான் என தெரிவித்தார்.
ப்ரிகோஜின் ஒரு திறமையான நபர், திறமையான தொழிலதிபர், அவர் நம் நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும், குறிப்பாக ஆப்பிரிக்காவிலும் பணிபுரிந்தார். அவர் எண்ணெய், எரிவாயு, விலைமதிப்பற்ற உலோகங்கள் கொண்ட நிறுவனங்கள் என பல்வேறு பகுதிகளில் பணியாற்றியுள்ளார் என குறிப்பிட்டார்.
வாக்னர் படை தலைவர் ப்ரிகோஜின் ரஷ்யாவுக்கு எதிராக செயல்பட்ட நேரத்தில் புடின் கூறுகையில், இது ஒரு துரோக நிகழ்வு, ப்ரிகோஜின் முதுகில் குத்திவிட்டார் என்று தனது கண்டனத்தை பதிவு செய்தார்.