நீடித்த சர்ச்சை… உறுதிப்படுத்திய ரஷ்யா… வாக்னர் படைத்தலைவர் ப்ரிகோஜின் உயிரிழந்துவிட்டார்.!

Wagner Group Commander Yevgeny Prigozhin

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு துணையாக போரிட்ட முக்கியமான தனியார் படை வாக்னர் படை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாக்னர் படை தலைவர் ப்ரிகோஜின் திடீரென ரஷ்யாவுக்கு எதிராக தனது படையினை செயல்படுத்த துவங்கினார். இதனால் ரஷ்யாவில் உள்நாட்டு போர் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த வாரம் புதன் கிழமை மாஸ்கோவின் வடமேற்கே நடந்த விமான விபத்தில் விமானத்தில் பயணித்த 7 பயணிகள் 3 விமானிகள் என 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. உயிரிழந்தவர்களில் ஒருவர் வாக்னர் படை தலைவர் ப்ரிகோஜின் எனவும் ரஷ்ய ஊடகங்கள் தகவல் தெரிவித்தன.

இந்நிலையில் வாக்னர் படை தலைவர் ப்ரிகோஜின் மறைவு குறித்து ரஷ்ய அதிபர் புதின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தனது இரங்கல் செய்தியை பகிர்ந்து கொண்டார். வாக்னர் படை தலைவர் ப்ரிகோஜின் உயிரிழப்புக்கு ரஷ்யா தான் காரணம் என சில சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.

இந்த செய்திகளை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்து இருந்தது. ப்ரிகோஜின் மரணத்தில் எங்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறுவது அப்பட்டமான பொய் என திட்டவட்டமாக இந்த கூற்றை ரஷ்யா மறுத்து வந்தது. மேலும், விபத்தில் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண சோதனை மேற்கொள்ள ரஷ்யா, விசாரணை குழுவை அனுப்பியதால், ப்ரிகோஜின் மரணத்தில் சந்தேகம் நீடித்தது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விசாரணைக் குழுவின் தலைவர் ஸ்வெட்லானா பெட்ரென்கோ ப்ரிகோஜின் மரணத்தை உறுதி செய்தார். தடயவியல் சோதனையில் விபத்தில் உயிரிழந்த 10 உடல்களும் அடையாளம் காணப்பட்டதாகவும், அதில் ப்ரிகோஜின் உடல்கூறுகள் அவரது அடையாளங்களுடன் ஒத்துப்போகின்றன என்றும் கூறினார்.

உடல்பரிசோதனை விவரங்கள் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், விமான விபத்துக்கான உறுதியான காரணங்கள் பற்றிய எந்த விவரங்களும் விசாரணைக் குழுவால் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்