விறுவிறு வாக்குப்பதிவு.? மீண்டும் முடிசூடுவாரா ரிஷி சுனக்.? இங்கிலாந்தில் ஆட்சி மாற்றமா.?
இங்கிலாந்து: தேர்தல் கருத்து கணிப்புகளின்படி இங்கிலாந்தில் ஆட்சி மாற்றம் உருவாகி தொழிலாளர் கட்சி ஆட்சியமைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்து நாட்டில் கடந்த 1997 முதல் 2010 வரையில் 13 ஆண்டுகள் தொழிலாளர் கட்சி ஆட்சியில் இருந்துள்ளது. அடுத்து 2010ஆம் ஆண்டு முதல் தற்போது (2024) வரையில் 14 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியில் உள்ளது. போரிஸ் ஜான்சன், லிஸ் ட்ரஸ்க்கு அடுத்து தற்போது கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக பொறுப்பில் உள்ளார்.
இந்நிலையில். பிரிட்டனின் புதிய பிரதமரை தேர்வு செய்யும் பொது தேர்தலானது அந்நாட்டு உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக ரிஷி சுனக்கும் (Rishi Sunak), தொழிலாளர் கட்சி சார்பாக கீர் ஸ்டார்மர் (Keir Starmer) பிரதமர் வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர்.
மொத்தமுள்ள 650 இடங்களில் குறைந்தது 326 இடங்களை வென்று பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும். உள்ளூர் நேரப்பபடி இரவு 10 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்று நாளை (வெள்ளி) தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக தொடர்வாரா.? அல்லது புதிய பிரதமராக கீர் ஸ்டார்மர் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது நாளை தெரிந்துவிடும்.
பன்னாட்டு செய்தி நிறுவனங்களில் வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி, இங்கிலாந்து நாட்டின் பொது சேவைகளின் (அரசு) தற்போதைய நிலைமை, மக்களின் பொருளாதாரம், நாட்டின் வரி மற்றும் அயல்நாட்டினரின் குடியேற்றம் ஆகியவை இந்த தேர்தலில் ஆட்சியை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக அமையும் என கூறப்படுகிறது.
மேலும், இந்த முறை நிச்சயம் பிரிட்டனில் ஆட்சி மாற்றம் நடைபெறும் என்றும் தொழிலாளர் கட்சி ஆட்சியமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும் கருத்து கணிப்புகள் கூறுகின்றன. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் உள்ள மொத்தம் 650 பிரிட்டன் தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் இந்த தேர்தலில் விறுவிறுப்பாக வாக்களித்து வருகிறார்கள்.