முடிவுக்கு வந்த சிரியா அதிபர் ரூல்ஸ்.. கிளர்ச்சியாளர்களின் தலைவர் வெற்றி உரை!

சிரியா தலைநகர் டமாஸ்கஸில் கிளர்ச்சியாளர் குழு தலைவர் அபு முகமது அல்-ஜோலானி, அங்குள்ள மசூதி ஒன்றில் வெற்றி உரை.ஆற்றியுள்ளார்

Bashar al assad - Abu Muhammad al-Jolani

டமாஸ்கஸ் : உலகமே உற்றுநோக்கும் தலைப்பு செய்தியாக தற்போது மாறி இருக்கிறது சிரியா நாட்டின் உள்நாட்டு போரும், அந்நாட்டு அதிபர் தப்பியோடிய தகவலும் தான். உள்நாட்டில் பல்வேறு நாடுகளின் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் ஒவ்வொரு பகுதியாக ஆக்கிரமித்து வந்த நிலையில், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் என்ற கிளர்ச்சியாளர் குழு சிரியா நாட்டின் தலைநகரை கைப்பற்றியுள்ளது.

இதனால், சிரியா நாட்டு அதிபர் பஷர் அல் அசாத் தனி விமானம் மூலம் வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டார். அவர் தற்போது ரஷ்யா மாஸ்கோவில் தஞ்சம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இப்படியான சூழலில், சிரியாவில் கைதாகி சிரையில் இருந்த கிளர்ச்சியாளர்கள் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். நாட்டின் பிரதான வங்கி சூறையாடல் என பல்வேறு சம்பவங்கள் அங்கு நடைபெற்று வருகிறது.

இப்படியான சூழலில் தாங்கள் வெற்றிபெற்றுவிட்டதாக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) அமைப்பின் தலைவர் சிரியா தலைநகர் டமாஸ்கஸில் ஒரு பிரபலமான மசூதி ஒன்றில் அறிவித்துள்ளார். சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த உமையாத் மசூதியில் கிளர்ச்சியாளர் குழு தலைவர் அபு முகமது அல்-ஜோலானி வெற்றி உரை ஆற்றினார்.

அவர் கூறுகையில், இது சரித்திர வெற்றி. பஷர் அல் அசாத் ஆட்சி முடிவுக்கு வந்தது. சிரியா தற்போது சுத்தீகரிக்கப்படுகிறது. இந்த வெற்றி, எனது சகோதரர்களான முழு இஸ்லாமிய தேசத்திற்கும் கிடைத்த வெற்றி. இந்த வெற்றி, எல்லாம் வல்ல இறைவனின் அருளால், தியாகிகள், விதவைகள், அனாதைகள் ஆகியோரின் தியாகத்தால் நமக்கு கிடைத்த வெற்றி.

சிறைவாசத்தை அனுபவித்தவர்களின் துன்பத்திற்கு கிடைத்த வெற்றி. அசாத்தின் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் கஷ்டங்களை அனுபவித்தவர்களுக்கு கிடைத்த வெற்றி.  சிரியாவில் தெஹ்ரானின் குடும்பத்தின் செல்வாக்கு முடிவுக்கு வந்துவிட்டது. ஈரானின் பங்கு குறைக்கப்படும். லெபனானில் ஹிஸ்பொல்லாவுக்கான அணுகல் துண்டிக்கப்படும்.  இது தெஹ்ரானுக்கு மட்டுமல்ல, டெல் அவிவ் (இஸ்ரேல்) மற்றும் வாஷிங்டனிலும் (அமெரிக்கா) அறிவிக்கப்படும் செய்தியாகும் என தெரிவித்தார்.

இந்த  செய்திக்குறிப்பை வெளியிட அபு முகமது அல்-ஜோலானி, அமெரிக்க செய்தி நிறுவனமாக CNNஐ அணுகியுள்ளார். அந்த செய்தி நிறுவனத்தின் மூலம், தாங்கள் பயங்கரவார கிளர்ச்சி பிரிவுகளில் இருந்து மாறுபட்டு உள்ளவர்கள் எனவும் அறிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்