எலிசபெத் ராணியின் சவப்பெட்டியில் உடைத்து வைக்கப்பட்ட செங்கோல்.! நூற்றாண்டு கால பின்னணி இதோ…
மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபத்தின் இறுதிச்சடங்கு நேற்று திங்கள் கிழமை, செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் அரச மரியாதையுடன் நிகழ்த்தப்பட்டது.
விண்ட்சரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில், நடந்த ராணி இரண்டாம் எலிசபத்தின் இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்வில், லார்ட் சேம்பர்லைன் தனது இறுதி மரியாதையை செலுத்தும் வகையில், தன் அதிகாரத்திற்காக வழங்கப்பட்ட செங்கோலை உடைத்தார். இந்த செங்கோலை உடைக்கும் நிகழ்வானது, அரசக் குடும்பத்தின் பாரம்பரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
இதுவரை ராணிக்கு தான் செய்து வந்த சேவையின் முடிவாக லார்ட் சேம்பர்லைன், பாரம்பரிய நிகழ்வின் ஒரு பகுதியாக செங்கோலை உடைத்து அதை ராணியின் சவப்பெட்டியின் மீது வைத்தார். இந்த நிகழ்வு நூற்றாண்டுகள் கடந்து தொடர்ந்து வருகிறது.
லார்ட் சேம்பர்லேன் பதவி என்பது அரச குடும்பத்தால் நியமிக்கப்பட்ட மிக மூத்த அதிகாரி பதவியாகும். இதன் மூலம் லார்ட் சேம்பர்லேன், அரச குடும்பத்தின் அனைத்து நியமனங்களையும், மற்றும் மன்னருக்கும், பிரபுக்கள் மாளிகைக்கும் இடையேயான தகவல்தொடர்புகளையும் கவனித்துக் கொள்கிறார்.
மேலும் அதிகாரத்தை ராணி எலிசபெத்திடமிருந்து இருந்து மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு சுமூகமாக மாற்றுவதற்கும் லார்ட் சேம்பர்லெய்ன் உதவுகிறார்.
பாரம்பரிய நிகழ்வைத் தொடர்ந்து, ராணியின் சவப்பெட்டி ராயல் வால்ட்டில் அரச குடும்பத்தினர் முன்னிலையில் கல்லறையில் இறக்கப்பட்டது. ராணி எலிசபெத், செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் கணவர் இளவரசர் பிலிப்பிற்கு அடுத்ததாக அடக்கம் செய்யப்பட்டார்.
ராணி எலிசபெத் உட்பட, ராணியின் தந்தை 6ஆம் கிங் ஜார்ஜ், ராணியின் தாய், மற்றும் அவரின் சகோதரி இளவரசி மார்கரெட் என அனைவரும் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தின் ஒரு பகுதியான 6ஆம் கிங் ஜார்ஜ் நினைவு தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.