பைடனின் திடீர் முடிவால் சிட்னியில் நடைபெறும் குவாட் உச்சி மாநாடு ரத்து.!
உள்நாட்டு பிரச்சனைகள் காரணமாக பைடன் ஆஸ்திரேலியா பயணத்தை கைவிட்டதை அடுத்து குவாட் உச்சி மாநாடு ரத்து.
அடுத்த வாரம் மே 24 ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னியில் குவாட் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அமெரிக்காவில் உள்நாட்டு கடன் உச்சவரம்பு பற்றிய பேச்சுவார்த்தைகள் முடங்கியதால், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் பயணத்தை மேற்கொள்ளப் போவதில்லை என முடிவு செய்தார்.
இதனால் திட்டமிடப்பட்டிருந்த குவாட் உச்சி மாநாடு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக திட்டமிட்டபடி பைடன், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்குச் செல்வதில்லை எனவும், மே 20 அன்று ஜப்பானில் ஜி7 உச்சிமாநாடு முடிந்த பிறகு பைடன் அமெரிக்கா திரும்புவார் என்று வெள்ளை மாளிகை இன்று அறிவித்தது.
சிட்னியில் குவாட் தலைவர்கள் உச்சி மாநாடு ரத்து செய்யப்பட்டதை ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ் இன்று ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தினார். இது அமெரிக்காவில் ஒரே இரவில் எடுக்கப்பட்ட முடிவு, குவாட் தலைவர்களின் கூட்டம் அடுத்த வாரம் சிட்னியில் நடக்காது, என்று அவர் கூறினார்.
இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவைக் கொண்ட குவாட் தலைவர்கள் ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டில் சந்திக்கலாம் என்றும் அவர் மேலும் கூறினார்.