“புருனே சுல்தானை சந்திப்பதில் மகிழ்ச்சி.!” பிரதமர் மோடிக்கு ராஜ வரவேற்பு.!
புருனே சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை பிரதமர் மோடி இன்று சந்தித்தார். இந்த சந்திப்பில் இரு நாட்டு நல்லுறவை மேம்படுத்தும் விதமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
புருனே : பிரதமர் மோடி வெளிநாட்டு பயணமாக புருனே சென்றுள்ளார். இந்தியா – புருனே இரு நாட்டு நல்லுறவை மேம்படுத்தும் முயற்சியில் இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். புருனே சென்ற பிரதமர் மோடியை விமான நிலையத்தில் பட்டத்து இளவரசர் ஹாஜி அல் முஹததீ பில்லா வரவேற்றார்.
அதன்பிறகு, நூருல் இமான் மாளிகையில் புருனே சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா மற்றும் அவரது குடும்பத்தினர் பிரதமர் மோடியை வரவேற்றனர். பின்னர், இமான் மாளிகையில் பிரதமர் மோடி மற்றும் சுல்தான் ஹாஜி ஹசனல் சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பில் இரு நாட்டு உறவுகள், வர்த்தக மேம்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிடுகையில், ” சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் பேச்சுவார்த்தை இரு தரப்பு முன்னேற்றம் குறித்து பரந்த அளவில் இருந்தது. மேலும், நமது நாடுகளுக்கு இடையே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினோம். இரு நாட்டு வர்த்தக உறவுகள், வர்த்தக தொடர்புகள் மற்றும் மக்களிடையேயான நல்லுறவுகள் ஆகியவற்றை விரிவுபடுத்தப் போகிறோம்.” என பதிவிட்டார்.
இந்திய வெளியுறவுத்துறை சார்பில் இரு நாட்டுத்தலைவர்கள் சந்திப்பு குறித்து பதிவிடுகையில், ” வலுவான இந்தியா-புருனே உறவுகளை உருவாக்குவதற்கு இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இஸ்தானா நூருல் இமானில் பிரதமர் நரேந்திர மோடியை புருனேயின் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா மற்றும் அவரது குடும்பத்தினர் அன்புடன் வரவேற்றனர். இந்தியாவின் இந்தோ-பசிபிக் பார்வையில் புருனே மிக முக்கிய பங்குதாரராக உள்ளது.” என கூறப்பட்டுள்ளது.
புருனே நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி அடுத்தாக சிங்கப்பூர் பயணம் மேற்கொள்கிறார். அங்கு 2 நாட்கள் பயணம் மேற்கொண்டு இந்தியா – சிங்கப்பூர் இடையிலான உறவுகளை வலுப்படுத்த இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். மேலும், பன்னாட்டு நிறுவன தலைவர்களை சந்தித்து அந்நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க உள்ளார்.