விரைவில் மருந்துகளுக்கு பெரிதளவில் இறக்குமதி வரி! அதிபர் ட்ரம்ப் அலர்ட்!
மருந்துகளுக்கு விரைவில் பெரிதளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்றால், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தார். இந்த அறிவிப்பை அவர் ஏப்ரல் 8, 2025 அன்று வாஷிங்டனில் நடைபெற்ற நேஷனல் ரிபப்ளிகன் காங்கிரஷனல் கமிட்டி (NRCC) டின்னரில் பேசும்போது தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது அவர் தனது பொருளாதாரக் கொள்கைகள் குறித்து உரையாற்றினார், அதில் வெளிநாட்டு மருந்துகளுக்கு வரி விதிப்பதன் மூலம் அமெரிக்காவில் மருந்து உற்பத்தியை மீண்டும் கொண்டுவருவதற்கான திட்டத்தை வலியுறுத்தினார். ட்ரம்ப் கூறுகையில், “நாம் விரைவில் மருந்துகளுக்கு ஒரு முக்கியமான வரியை அறிவிக்க உள்ளோம்.
அவர்கள் அதைக் கேட்டவுடன், சீனாவிலிருந்தும் மற்ற இடங்களிலிருந்தும் வெளியேறுவார்கள், ஏனெனில் அவர்களது பெரும்பாலான தயாரிப்புகள் இங்கு விற்கப்படுகின்றன, மேலும் அவர்கள் தங்கள் ஆலைகளை இங்கு திறப்பார்கள்,” என்று தெரிவித்தார். இது அமெரிக்க உற்பத்தியை மேம்படுத்துவதையும் வெளிநாட்டு சார்பைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த வரி எப்போது, எந்த அளவில் அமலுக்கு வரும் என்பது பற்றிய குறிப்பிட்ட விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்பு
இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்தால், இந்தியாவுக்கு பொருளாதார ரீதியாக பல சவால்கள் ஏற்ப்படலாம். உதாரணமாக,
ஏற்றுமதி செலவு அதிகரிப்பு: இறக்குமதி வரி உயர்ந்தால், இந்திய மருந்து நிறுவனங்கள் அமெரிக்க சந்தையில் தங்கள் பொருட்களை அதிக விலைக்கு விற்க வேண்டியிருக்கும், இது அவர்களின் போட்டித்தன்மையை பாதிக்கலாம்.
சந்தை பங்கு இழப்பு: அமெரிக்க நிறுவனங்கள் அல்லது பிற நாடுகளின் நிறுவனங்கள் இந்த இடைவெளியை நிரப்ப முனையலாம், இதனால் இந்தியாவின் சந்தை பங்கு குறைய வாய்ப்புள்ளது.
லாபம் குறைவு: வரியை நிறுவனங்கள் தாங்களே ஏற்க முடிவு செய்தால், அவர்களின் லாப விகிதம் குறையும்.
மறு உற்பத்தி திட்டமிடல்: சில இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே உற்பத்தி ஆலைகளை அமைக்க முயலலாம், ஆனால் இதற்கு பெரிய முதலீடு மற்றும் நேரம் தேவைப்படும்.
ஏற்கனவே, சமீபத்தில் டொனால்டு ட்ரம்ப் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு 30%, சீனாவுக்கு 34%, இலங்கை 44%, வியட்நாமுக்கு 46%, கம்போடியாவுக்கு 49% என அமெரிக்காவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் சுமார் 60 நாடுகளுக்கும் தனித்தனியாக புதிய இறக்குமதி வரி விதிப்பை அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து தற்போது மருந்துகளுக்கு விரைவில் பெரிதளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அவர் அறிவித்திருப்பது மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.