புதிய வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தம்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!
அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பரஸ்பர வரிகளை 90 நாட்களுக்கு இடைநிறுத்துவதாக அறிவித்தார் டொனால்ட் ட்ரம்ப்.

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு 30%, சீனாவுக்கு 34%, இலங்கை 44%, வியட்நாமுக்கு 46%, கம்போடியாவுக்கு 49% என அமெரிக்காவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் சுமார் 60 நாடுகளுக்கும் தனித்தனியாக புதிய இறக்குமதி வரி விதிப்பை அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நாடுகளுக்கான வரி விதிப்பை 90 நாள்கள் நிறுத்தி வைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அவர் நடத்தி வரும் வர்த்தகப் போரின் விளைவாக சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்கா 125% வரி விதித்துள்ளது. இதே போல இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கும் வரி விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சீனா தவிர மற்ற நாடுகளுக்கு வரி விதிப்பை டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். இந்த முடிவு, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, ட்ரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில், 75-க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்வந்துள்ளதாகவும், அவர்கள் அமெரிக்காவிற்கு எதிராக பதிலடி வரிகளை விதிக்கவில்லை என்றும் கூறினார்.
இந்த 90 நாள் இடைநிறுத்தம், வர்த்தக தடைகள், நாணய மாற்று மதிப்பு கையாளுதல், மற்றும் பிற வரி அல்லாத தடைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த 90 நாள் இடைநிறுத்தம், இந்தியா, வியட்நாம், மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளுக்கு அமெரிக்காவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை பேசுவதற்கு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும், 90 நாட்களுக்குள் பல நாடுகளுடன் சிக்கலான வர்த்தக ஒப்பந்தங்களை முடிப்பது ஒரு பெரிய சவாலாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த இடைநிறுத்தம் தற்காலிக நிவாரணத்தை அளித்தாலும், 90 நாட்களுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பது தெளிவாக இல்லை. இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இல்லாவிட்டால் மீண்டும் கடுமையான வரிகளை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.