24 ஆண்டுகளில் முதல்முறையாக வடகொரியா செல்லும் அதிபர் புடின் !!
வடகொரியா: ரஷிய அதிபரான வ்லாதிமிர் புடின், 24 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வட கொரியாவுக்கு செல்லவிருக்கிறார்.
கடந்த 2000ம் ஆண்டுக்கு பின் முதல் முறையாக ரஷ்ய அதிபரான புடின் வட கொரியா நாட்டிற்கு பயணப்பட இருக்கிறார். மேலும், பயணத்தில் வடகொரியாவின் அதிபரான கிம் ஜோங் உன் உடன் நேரிடையான பேச்சுவார்த்தைக்கும் புடின் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. மேற்கத்திய நாடுகளின் பெரும் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள இந்த இரு நாடுகளும் (ரஷ்யா-வடகொரியா), நாட்டின் பாதுகாப்புக்காகவும் மற்றும் பொருளாதாரத்துக்காகவும் ஒத்துழைப்பை விரிவுபடுத்த உறுதிமொழி எடுத்துள்ளதாக தெரிகிறது.
இதனால், முக்கிய அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்கள் அடங்கிய பெரும் படையுடன் வ்லாதிமிர் புடின் இந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமை வடகொரியா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவர்களுடன் ரஷ்ய ராணுவ அதிகாரிகளும் உடன் செல்கின்றனர். உக்ரைன் மீதான போருக்கு பின்னர், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் புடினுக்கு எதிராக கைதாணை பிறப்பித்துள்ள நிலையில், பிற நாடுகளுக்கு செல்வதை அவர் கட்டுப்படுத்திக் கொண்டுள்ளார்.
ஆனால், தற்போது வடகொரியா நாட்டுக்கு பயணப்பட இருக்கும் இந்த பயணமானது உலகநாடுகளில் அரிதானதாகவே பார்க்கப்படுகிறது. மேலும், ஏற்கனவே ரஷ்யாவுக்கு தேவையான சோவியத் கால ஆயுதங்களை வடகொரியா விநியோகித்து வருகிறது. அதுமட்டுமின்றி உக்ரைன் போரில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் மற்றும் மின்னணு உபகரணங்களையும் ரஷ்யாவுக்கு வடகொரியா வழங்கியுள்ளது.
இதனால் தான் பதிலுக்கு உதவி செய்யும் பொருட்டு பொருளாதார உதவி, நாட்டுக்காக ஆதரவு செலுத்துவது மற்றும் ஆயுதங்கள் என வடகொரியாவுக்கு ரஷ்யா வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வடகொரியா பயணத்திற்கு பிறகு, புடின் வருகிற ஜூன் 19-20 தேதிகளில் வியட்நாமுக்கு பயணம் மேற்கொள்வர் என தெரியவந்துள்ளது.