ஆப்கானிஸ்தானில் 6.6 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இந்தியாவிலும் அதிர்வு.!
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இது ரிக்டர் அளவில் 6.6 என பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலும் இந்த அதிர்வு உணரப்பட்டது.
துர்க்மெனிஸ்தான், இந்தியா, கஜகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளிளும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், நிலநடுக்கத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் வீடுகள் இடிந்து மேற்கூரை விழுந்ததில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வடமேற்கு இந்தியா மற்றும் டெல்லியில் இந்த நிலநடுக்கம் நீண்ட நேரம் உணரப்பட்டது.
உத்தரபிரதேசம், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் நிலநடுக்கம் பல நொடிகள் நீடித்ததால் மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறினர். துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த மாதம் ஏற்பட்ட பலத்த நிலநடுக்கத்தினால் கிட்டத்தட்ட 50,000 பேர் உயிரிழந்த நிலையில், அதனை முன்கூட்டியே கணித்த நிபுணர் இந்தியா மற்றும் சுற்றியுள்ள நாடுகளிலும் இதேபோன்று நிலநடுக்கம் ஏற்படும் என்று கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.