‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ கொலை குற்றவாளியை காட்டிக்கொடுத்த கூகுள் மேப்!
கூகுள் ஸ்ட்ரீட் மேப் புகைப்படத்தை கொண்டு ஸ்பெயினில் காணாமல் போன ஒரு நபரின் கொலை சம்பவத்தை அந்நாட்டு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து என்ன செய்தாலும், அது தொழில்நுட்பத்தின் கண்ணில் சட்டெனெ பட்டுவிடுகிறது. சற்று தாமதமானாலும், குற்றவாளி தப்ப முடியாது. அப்படி ஒரு சம்பவம் தான் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றுள்ளது.
வடக்கு ஸ்பெயின் நாட்டில் ஆண்டலூஸ் எனும் கிராமத்தில் ஜார்ஜ் லூயிஸ் பெரெஸ் எனும் நடுத்தர வயது நபர் ஒருவர் கடந்த வருடம் அக்டோபரில் காணாமல் போயுள்ளார். அவரை தேடும் பணியில் உள்ளூர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர். இறுதியாக அவர் சென்ற இடம், அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆன இடம் என தேடியுள்ளனர். ஆனால் அவரை கண்டறிய முடியவில்லை.
இப்படி இருந்த சமயத்தில் தான் அண்மையில் கூகுள் மேப் புகைப்படம் அவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதை கண்டறிய உதவியுள்ளது. அதாவது , கூகுள் மேப்பில் உள்ளீடு செய்ய ஸ்ட்ரீட் போட்டோவுக்காக கூகுள் நிறுவனம் பெரும்பாலான இடங்களை புகைப்படம் எடுத்து கூகுள் மேப்பில் அந்த இடத்தின் புகைப்படத்தை காண்பிக்கும். அப்படி சம்பவம் நடைபெற்ற சமயம் கூகுள் மேப் புகைப்படம் எடுத்துள்ளது.
அந்த புகைப்படத்தில் ஒரு நபர் தனது கார் டிக்கியில் சந்தேகப்படும்படியான ஒரு மூட்டையை வைப்பதை புகைப்படம் எடுத்துள்ளது. இதனை கவனித்த போலீசார் அந்த புகைப்படம் குறித்து ஆய்வு செய்துள்ளனர். அப்போது தான், அந்த மூட்டைக்குள் இருப்பது காணாமல் போன ஜார்ஜ் லூயிஸ் பெரெஸ் உடல் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
போலிஸ் விசாரணையில், காணாமல் போன ஜார்ஜ் லூயிஸ் பெரெஸை, ஒரு பெண் சந்தித்ததாகவும், அந்த பெண் உயிரிழந்தவருடைய முன்னாள் மனைவி என்பதும், அவரும் அவருடன் 32 வயதான கியூபா நாட்டை சேர்ந்த நபரும் இந்த கொலையை செய்து ஜார்ஜ் லூயிஸ் பெரஸை மூட்டையாக கட்டி ஆண்டலூஸ் கிராம மயானத்தில் புதைத்துள்ளனர். தற்போது அந்த மயானத்தில் இருந்து ஒரு சடலத்தை எடுத்துள்ளனர்.
கூகுள் ஸ்ட்ரீட் போட்டோ ஜார்ஜ் லூயிஸ் பெரெஸை கண்டறிய உதவியது உண்மை தான். ஆனால், அந்த ஒரு புகைப்பததை மட்டும் வைத்துக்கொண்டு இந்த கொலையை உறுதி செய்ய முடியாது. கைதாகியுள்ள இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.தீவிர விசாரணை முடிந்து ஆதாரங்கள் கிடைத்த பிறகு தான் இவர்கள் மட்டும் தான் கொலையை செய்தார்களா அல்லது வேறு என்ன நடந்தது என்ற விவரம் தெரியவரும் என உள்ளூர் போலீசார் அந்நாட்டு ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர்.