பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம்.! இந்தியா மீது டிரம்ப் கடும் விமர்சனம்.!
3 நாள் பயணமாக அமெரிக்கா செல்ல உள்ள பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா : பிரதமர் மோடி வரும் செப்டம்பர் 21ஆம் தேதி 3 நாள் பயணமாக அமெரிக்கா செல்ல உள்ளார். செப்டம்பர் 21, 22, 23 ஆகிய தேதிகளில் அமெரிக்கா செல்லும் பிரதமர் அங்கு நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் . இந்த மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமை தாங்குகிறார்.
இந்த அமெரிக்க பயணத்தில், வரும் செப்டம்பர் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அமெரிக்கா வாழ் இந்தியர்களை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். இந்த பயணத்தில் அமெரிக்காவில் உள்ள பன்னாட்டு தொழில் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்தித்து இந்தியாவில் முதலீடு மேற்கொள்ள அழைப்பு விடுக்க உள்ளார்.
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் குறித்து நேற்றைய தேர்தல் பிரச்சாரத்தில் குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் அமெரிக்க அதிபருமான டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டு பேசினார். மிச்சிகனில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த டிரம்ப் பேசுகையில், ” அமெரிக்க தொழில் துறையில் இந்தியா பெரிய துஷ்பிரயோகம் செய்துள்ளது ” என குற்றம் சாட்டினார் .
ஆனால், அதே நேரம், ” பிரதமர் நரேந்திர மோடி அற்புதமான மனிதர். அமெரிக்காவுக்கு வரும் அவரை அடுத்த வாரம் நான் சந்திக்க உள்ளேன்.” என டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். தற்போது பிரதமர் பதவியில் இல்லாத டிரம்ப் , இந்திய பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக கூறியிருக்கிறார். இந்த சந்திப்புக்கு பிரதமர் மோடி தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என்ற அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.