இன்று ஓர் வரலாற்று நிகழ்வு.! பிரதமர் மோடியின் உக்ரைன் பயண சிறப்புகள்…
உக்ரைன் : போலந்து நாட்டில் இருந்து உயர் பாதுகாப்பு கொண்ட ரயில் மூலம் பயணித்து இந்திய பிரதமர் மோடி உக்ரைன் நாட்டிற்கு இன்று காலை (அந்நாட்டு நேரப்படி) சென்றுள்ளார்.
கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் போலந்து நாட்டு பயணத்தை முடித்து கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று உக்ரைன் நாட்டிற்கு வந்துள்ளார். போலந்து நாட்டு பயணத்தில் அந்நாட்டு பிரதமர் டோனல்ட் டஸ்குடனான சந்திப்புக்கு பிறகு பிரதமர் மோடி கூறுகையில், “இந்தப் பயணத்தில் அமைதியை நிலைநாட்டத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
போரின் போது அப்பாவி மக்கள் உயிரிழப்பது மனிதகுலம் சந்திக்கும் மிகப்பெரிய சவால். இந்தப் பயணத்தில் உலக அமைதியை நிலை நிறுத்தத் தேவையான பேச்சுவார்த்தை மற்றும் அது தொடர்பான அரசு நடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவளிக்க விரும்புகிறோம். தமது நட்பு நாடுகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது.” என போலந்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசியிருந்தார்.
அமைதியை நிலைநிறுத்தி பிரதமர் மோடி போலந்தில் பேசியதை தொடர்ந்து, அவர் மேற்கொண்டுள்ள உக்ரைன் பயணம் உலக நாடுகளால் உற்றுநோக்கப்படுகிறது. உக்ரைனில் கடந்த 2022 முதல் உக்ரைன் – ரஷ்ய போர் நடைபெற்று வருகிறது. தற்போது வரையில் தாக்குதல்கள் தொடர்கிறது.
இந்த போரை தொடர்ந்து தான், உக்ரைனில் விமான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு போலந்து வழியாக ரயில் போக்குவரத்து மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த உயர் பாதுகாப்பு ரயில் (Train Force One) மூலமாக மட்டுமே பன்னாட்டு தலைவர்கள் மட்டுமின்றி உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியும் வெளிநாடுகளுக்கு பயணித்து வருகிறார்.
இந்த ரயிலானது டீசல் எஞ்சின் கொண்டு இயக்கப்படுகிறது. புல்லட் தடுப்பு உள்ளிட்ட உயர் பாதுகாப்பு அம்சங்களை இந்த உயர் பாதுகாப்பு ரயில் கொண்டுள்ளது. போலந்து – உக்ரைன் எல்லையில் இருந்து உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ்-விற்கு 10 மணி நேர பயணத்திற்கு பிறகு இந்த ரயில் சென்றடைகிறது.
இதற்கு முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின் புரூட்டோ, இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் இந்த உயர் பாதுகாப்பு ரயிலில் உக்ரைனுக்கு பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1991ஆம் ஆண்டில் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து தனி நாடாக உக்ரைன் மாறியதிற்கு பின்னர் அங்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய பிரதமர், நரேந்திர மோடி ஆவார். முன்னதாக ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டு அதிபர் புதினை சந்தித்த பிரதமர் மோடி இரு நாட்டு போரை நிறுத்துமாறு வலியறுத்தினார்.
அதே போல, தற்போது உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்தும் இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்து அமைதிக்கு திரும்ப வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளார் என கூறப்படுகிறது. உக்ரைன் நாட்டின் நேரப்படி இன்று காலை உக்ரைன் அதிபர் கீவ் சென்றடைந்த பிரதமர் மோடி அடுத்ததாக ஜெலன்ஸ்கியை சந்திக்க உள்ளார்.