பரபரப்பான சூழலில் பிரான்ஸ் & அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி!
இந்த பயணம் இரு நாடுகள் உடனான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லியில் இருந்து பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது, அவர் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருடன் கலந்துரையாடுவார்.
இன்று பிற்பகல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட மோடி, இரு நாடுகள் உடனான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முதலில், பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி மக்ரோனின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 11-12 வரை பிரான்சில் இருப்பார். அங்கு அவர் AI செயல் உச்சிமாநாட்டிற்கு இணைத் தலைமை தாங்குவார்.
இதையடுத்து பிரான்சிலிருந்து, ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அழைப்பின் பேரில் அவர் அமெரிக்காவிற்கு இரண்டு நாள் பயணமாகச் செல்வார். அங்கு அவர், டிரம்பை சந்தித்து அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த தலைவர்களுடன் கலந்துரையாடுவார். டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு பிரதமர் நரேந்திர மோடியின் முதல் அமெரிக்க பயணம் இதுவாகும்.
சமீபத்தில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் முதல்கட்டமாக 104 இந்தியர்கள், அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. அது மட்டும் இல்லாமல், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கை, கால்களில் விலங்கு போடப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்கள்.
இந்த பரபரப்பான சூழலில், அதிபர் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் பதவியேற்ற பிறகு, இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும். பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தின் போது, எலான் மஸ்க்கை சந்திக்க வாய்ப்புள்ளது. முன்னதாக, பிரதமர் மோடி ஜூன் 2017ல் அமெரிக்காவிற்கு சென்றார். மேலும், பிப்ரவரி 2020 இல் இந்தியாவிற்கு அரசு முறை பயணமாக அதிபர் டிரம்பை வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.