பிரதமர் மோடி – புதின் சந்திப்பு : ரஷ்ய ராணுவத்தில் சிக்கிய இந்தியர்கள் விடுதலை.?
மாஸ்கோ: ரஷ்ய ராணுவத்தில் சிக்கிய இந்தியர்களை விடுதலை செய்ய வேண்டும் என ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு சென்றுள்ளார். நேற்றும் இன்றும் ரஷ்யாவில் நடைபெறும் நிகழ்வுகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வருகிறார். நேற்று ரஷ்யா சென்ற பிரதமர் மோடியை ரஷ்ய துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றார்.
மாஸ்கோவில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பரஸ்பரம் கைகுலுக்கி சந்தித்து கொண்டனர். பின்னர் இருவருக்கும் இடையில் தனிப்பட்ட சந்திப்புகள் நிகழ்ந்தன. இதனை அடுத்து இரவு பிரதமர் மோடிக்கு அங்கு விருந்து அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி – புதின் சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில், ரஷ்யா – உக்ரைன் போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் இந்தியர்கள் பலரை ரஷ்யாவில் வேலைவாய்ப்பு என கூறி அங்கு ரஷ்ய ராணுவத்தில் பணியமர்த்தப்பட்டதாகவும் குற்றசாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து, காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் நாடாளுமன்றத்தில், இந்திய தூதரக தகவலின்படி குறைந்தபட்சம் 50 இந்தியர்கள் ரஷ்ய இராணுவத்தில் சேர்ந்துள்ளனர். அதில் 2 நபர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இப்படியான சூழலில், ரஷ்ய ராணுவத்தில் உள்ள இந்தியர்களை மீட்க வேண்டும் என பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினுக்கு கோரிக்கை வைத்ததாக ANI செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இதற்கு ரஷ்ய அதிபர் புதின் உடன்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் ரஷ்ய ராணுவத்தில் சிக்கியுள்ள இந்தியர்கள் விரைவில் நாடு திரும்ப இரு நாட்டு சார்பிலும் அதிகாரபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.