சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம்.! பிரதமர் மோடி அசத்தல் அறிவிப்பு.!
சிங்கப்பூரில் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் விரைவில் அமைக்கப்படும் என பிரதமர் மோடி இன்று அறிவித்தார்.
சிங்கப்பூர் : பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக புருனே மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளர். நேற்று புருனே நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று மாலையில் சிங்கப்பூர் சென்றடைந்தார். இன்று அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதன் பிறகு லாரன்ஸ் வோங் தலைமையில், அரசு உயர்மட்டக் குழு சார்பில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, இரு நாட்டு உறவுகள் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். அதனுடே, சிங்கப்பூரில் திருவள்ளுவர் பண்பாடு மையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி பேசுகையில், ” இந்தியாவில் இருந்து முதன் முறையாக திருவள்ளுவர் பண்பாட்டு மையம் ஒன்று சிங்கப்பூரில் விரைவில் அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். மிகப் பழமையான மொழியான தமிழில் உலகிற்கு வழிகாட்டும் சிந்தனைகளை வழங்கிய மகான் திருவள்ளுவர்.
இவரது திருக்குறள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டது. ஆனால், அதில் சொல்லப்பட்ட கருத்துக்கள் இன்றும் பொருத்தமானவையாக உள்ளது.
‘ நாயனோடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்பு பார்க்கும் உலகு ‘
என்று, ‘நீதிக்கும், பொதுமக்களுக்கும் சேவையும் செய்தவர்களை உலகம் போற்றும்’ என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். சிங்கப்பூரில் வசிக்கும் மில்லியன் கணக்கான இந்தியர்களும் இந்த கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த பங்களிக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்.” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார்.
சிங்கப்பூரில் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், ” பிரதமர் மோடி அவர்கள், சிங்கப்பூரில் தமிழ் மொழி, நாகரீகம், பண்பாடு இவற்றை வளர்க்கவும், பேணி காக்கவும், ‘திருவள்ளுவர் கலாச்சாரம் மையம்’ ஒன்றை நிறுவ உள்ளதாக அறிவித்தமைக்கு நன்றி.” என பதிவிட்டுள்ளார்.