டைட்டானிக் சுற்றுலா சென்ற பயணிகள்…தேடுதல் வேட்டை நிறைவு… வெளியான முக்கிய அறிவிப்பு.!
டைட்டானிக் சுற்றுலாவுக்கு நீர்மூழ்கிக் கப்பலில் சென்ற அனைவரும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
பல வருடங்களுக்கு முன்பு கடலுக்கடியில் மூழ்கிய உலகின் மிகப்பெரிய கப்பல் எனக்கருதப்படும் டைட்டானிக் கப்பலை சுற்றிப்பார்க்க, அமெரிக்காவின் ஓசன்கேட் நிறுவனம் ஏற்பாடு செய்த பயணத்தில், சென்ற 5 பேரும் இறந்துவிட்டதாக அமெரிக்க கடலோரக் காவல்படை அறிவித்துள்ளது.
டைட்டன் என்ற நீர்மூழ்கிக்கப்பலில் பிரிட்டிஷ் நாட்டவரான ஹமிஷ் ஹார்டிங், பாகிஸ்தானை சேர்ந்த ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான், ஓசன்கேட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான பைலட் ஸ்டாக்டன் ரஷ் மற்றும் பிரெஞ்சு ஆய்வாளர் மற்றும் நிபுணரான பால்-ஹென்றி நர்கோலெட் ஆகியோர் ஜூன் 18இல் இதில் பயணத்தை தொடங்கினர்.
இந்த டைட்டன் என்ற நீர்மூழ்கிக்கப்பல் கடந்த 18 ஆம் தேதி பயணத்தை தொடங்கிய 1 மணிநேரம் 45 நிமிடங்களில், தனது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் 5 பேரையும் தேடும் பணியில் அமெரிக்க கடலோரக்காவல்படை தீவிரமாக ஈடுபட்டது, குறிப்பாக டைட்டனில் இருந்து வரும் எந்த ஒலியையும் கேட்கும் சோனார் மிதவைகளும் தேடுதலுக்கு பயன்படுத்தப்பட்டன.
ஆனால் தற்போது கடலுக்கடியில் நீர்மூழ்கிக்கப்பலின் சில நொறுங்கிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, டைட்டனில் பயணம் செய்த 5 பேரும் இறந்துவிட்டனர், டைட்டன் நீர்மூழ்கிக்கப்பல் ஒரு பெரிய வெடிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு கொண்டுவரப்படும் எனவும் அமெரிக்க கடலோரக்காவல்படை அதிகாரி தெரிவித்தார்.