பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல்…. மொபைல் சேவைகளை நிறுத்தி உள்துறை அமைச்சகம் உத்தரவு!
கடந்த 2022-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து, அவரது தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர், பாகிஸ்தான் பிரதமராக ஷாபாஸ் ஷெரிப் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிந்ததால், கடந்த ஆகஸ்டு மாதம் அந்நாட்டு நாடாளுமன்றம், கலைக்கப்பட்டு அன்வாருல் ஹக் காதர் இடைக்கால பிரதமராக தேர்வானார்.
இதன்பின் பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 5 மணிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இன்று நாடு முழுவதும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
15ஆவது ஊதிய ஒப்பந்தம்.. குழு அமைத்த தமிழக அரசு..!
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் வரும் 22ம் தேதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று அடுத்தடுத்து 2 தேர்தல் அலுவலகங்களை குறிவைத்து தாக்குதல்கள் சம்பவம் நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் பெரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் இன்று பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மேலும், இந்த அடுத்தடுத்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், பாகிஸ்தான் முழுவதும் மொபைல் சேவைகளை நிறுத்தி அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பதற்றத்தின் உச்சக்கட்டத்தில் பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மொபைல் சேவைகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.