பாகிஸ்தான் ரயில் கடத்தல்: முடிவுக்கு வந்த மீட்பு நடவடிக்கை… அனைத்து தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை!
ரயில் கடத்தல் சம்பவத்தில் 33 பி.எல்.ஏ வீரர்கள், 21 பயணிகள், 4 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று முன் தினம் போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) கடத்தியது.
தற்பொழுது இந்த கடத்தல் சம்பவத்தில், பணயக்கைதிகள் அனைவரையும் அந்நாட்டு ராணுவம் மீட்டுள்ளது. ஒரு தகவலின்படி, 346 பணயக்கைதிகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் 28 பாக்ஸ்தான் ராணுவ வீரர்களும், 21 பணயக்கைதிகளும் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, இந்த சம்பவ இடத்தில் இருந்த 33 கிளர்ச்சியாளர்களையும் பாதுகாப்புப் படையினர் கொன்றதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் துன்யா நியூஸ் டிவியிடம் பேட்டியளித்தார். பலூசிஸ்தானில் ஜாஃபர் ரயிலை கடத்திய பின்னர், பணயக்கைதிகளாக வைத்திருந்த பலூச் கிளர்ச்சியாளர்களால் குறைந்தது 21 பயணிகளும் 4 துணை ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டதாக அவர் தகவல் தெரிவித்தார்.
அனைத்து மீட்பு நடவடிக்கை முடிவடைந்ததா என்று கேட்டபோது, “கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டு, அனைத்து தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை செய்யப்பட்டு, அனைத்து பயணிகளையும் பாதுகாப்பாக மீட்டதன் மூலம் நேற்று (புதன்கிழமை) மாலையில் இந்த ரயில் கடத்தல் சம்பவம் முடிவுக்கு வந்தது” என்றும் கூறினார். இறுதி மீட்பு பணியின் போது, எந்த பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும, அதற்கு முன்பாக 21 பயணிகளும் துர்திஷ்டவசமாக கொல்லப்பட்டதாக கூறினார்.