Pakistan: பாகிஸ்தானில் ஜனவரியில் பொதுத்தேர்தல் – அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

PEC

பாகிஸ்தானில் வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் பொதுத்தேர்தல் நடக்கும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த ஆக.9ம் தேதி இரவோடு இரவாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் ஆலோசனையின் பேரில், திடீரென அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைய 2 நாட்களே இருந்த நிலையில், முன்கூட்டியே கலைக்கப்பட்டது.

இந்தியாவை போன்று பாகிஸ்தானிலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடந்து வருகிறது. அதன்படி, பாகிஸ்தானில் கடந்த 2018ல் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அங்கு கூட்டணி ஆட்சி அமைந்தது. அதில், பாகிஸ்தானில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது.

இம்ரான் கான் பிரதமராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் செயல்பட்டார். பின்னர் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்து, ஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைமையில் அரசு பொறுப்பேற்றது. பாகிஸ்தான் பிரதமராக அக்கட்சி தலைவர் ஷெபாஸ் ஷெரீப் செயல்பட்டு வந்தார். இந்த சமயத்தில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டது.

இதனால், பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் 90 நாட்களுக்குள் நடத்தப்பட உள்ளதாக அப்போதே கூறப்பட்டது. இந்த நிலையில், பாகிஸ்தானில் 2024 ஜனவரி மாதம் 4-வது வாரத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் பொதுத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 90 நாட்களில் தேர்தல் நடத்த சாத்தியம் இல்லை என்பதால் ஜனவரி மாதம் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தொகுதிகளின் முதற்கட்டப் பட்டியல் செப்டம்பர் 27  அன்று வெளியிடப்படும். முதற்கட்ட பட்டியல்கள் தொடர்பான புகார்கள் மற்றும் கருத்துகள் கேட்கப்பட்ட பின்னர், நவம்பர் 30-ம் தேதி தொகுதிகளின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என பாகிஸ்தானில் உள்ள பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதையடுத்து, 2024 ஜனவரி இறுதி வாரத்தில் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்