பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்! இம்ரான் ஆதரவு சுயட்சைகள் முன்னிலை.. பெரும்பான்மை இல்லாமல் இழுபறி..
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவடைந்தது. இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர்கள் நவாஸ் ஷெரீப், ஷெபாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக், பாகிஸ்தான் மக்கள் கட்சி, முத்தாஹிதா குவாமி இயக்கம் ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் தேர்தலை சந்தித்தனர்.
பாகிஸ்தானில் மொத்தமுள்ள 336 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது, இதில் 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் சிறுபான்மையினருக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த சூழலில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஆரம்பம் முதலே பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் முன்னணி வகித்து வருவதாக தகவல் வெளியாகின.
பரபரக்கும் பாகிஸ்தான் அரசியல் களம்.! சிறையில் இம்ரான் கான்.! பெருகும் ஆதரவு….
இந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் சிறையில் அடைக்கப்பட்ட இம்ரான் கான் ஆதரவு பெற்ற சுயட்சைகள் முன்னிலை வகித்து வருவதாக கூறப்படுகிறது. மொத்தமுள்ள 265 தொகுதிகளில் பிடிஐ கட்சி தலைவர் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 84 முன்னிலையில் உள்ளதாகவும், தற்போது வரை 55 இடங்களில் வென்றுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோன்று, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி 59 தொகுதிகளை கைப்பற்றியுள்ளதாகவும், பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 44 தொகுதிகளை கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பாகிஸ்தானில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமல் இழுபறி ஏற்பட்டுள்ளது. மேலும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லாகூர் தொகுதியிலும், பிபிபி கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ குவாம்பெர் தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.