‘ஆபரேஷன் காவேரி’ – சூடானில் இருந்து 278 இந்தியர்கள் புறப்பட்டனர்!
சூடானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களில் முதல் கட்டமாக 278 பேர் ஜெட்டா நகருக்கு புறப்பட்டனர்.
சூடானில் இருந்து இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் காவேரி’ திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. சூடானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களில் முதல் கட்டமாக 278 பேர் ஜெட்டா நகருக்கு புறப்பட்டனர். அதன்படி, சூடானில் இருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு இந்திய கடற்படை கப்பல் சுமேதா மூலம் 278 இந்தியர்கள் புறப்பட்டனர்.
சூடான் நாட்டில் ராணுவத்துக்கும், துணை ராணுவ ஆதரவு படையினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் ஏற்பட்டு கடும் துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரங்கள் நடந்து வருகிறது. இந்த மோதலினால் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை இந்த மோதலில் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 3,351 பேர் காயமடைந்துள்ளதாகவும் (WHO) உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த மோதலுக்கு மத்தியில் சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை இந்தியா தொடங்கியுள்ளது. இந்த மீட்புப்பணிக்கு ஆபரேஷன் காவேரி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆபரேஷன் மூலம் சூடானில் சிக்கி தவித்த சுமார் 500 இந்தியர்கள் அந்நாட்டு துறைமுகத்தை ஏற்கனவே வந்தடைந்த நிலையில், தற்போது முதற் கட்டமாக 278 இந்தியர்கள் கப்பல் மூலம் ஜெட்டா நகருக்கு புறப்பட்டுள்ளனர்.