ப்ளூ டிக் பயனர்கள் மட்டுமே ட்விட்டரில் வாக்களிக்க முடியும்-மஸ்க்
ட்விட்டரில் ப்ளூ டிக் பயனர்கள் மட்டுமே முக்கிய கருத்துக்கணிப்புகளில் வாக்களிக்க முடியும் என்று மஸ்க் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், ட்விட்டரில் எதிர்கால முடிவு குறித்த முக்கிய கருத்துக்கணிப்புகளில் ப்ளூ டிக் சந்தாதாரர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என கூறியுள்ளார். நேற்று மஸ்க், ட்விட்டரில் தான் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமா என கருத்துக்கணிப்பு கேட்டிருந்தார்.
மேலும் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு தான் கட்டுப்படுவதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கணிப்பில் 57.5% பயனர்கள் மஸ்க் பதவி விலக வேண்டுமென வாக்களித்திருந்தனர். இந்த கருத்துக்கணிப்பு முடிவுக்கு பிறகு சில மணிநேரங்கள் கழித்து இரவு 11:30 மணிக்கு மஸ்க் ஒரு ட்வீட் செய்திருந்தார்.
அந்த ட்வீட்டில், மிகவும் பிரபலமான கோப்பு பகிர்வு இணையதளமான மெகா அப்லோட்(Mega Upload)-இன் நிறுவனர் கிம் டாட்காம்- இன் கருத்தை சுவாரஸ்யமானது என்று பதிலளித்து, இந்த முடிவை ட்விட்டர் நடைமுறைப்படுத்தும் என்று கூறியுள்ளார். கிம் டாட்காம் கூறியபடி, ட்விட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் நிறைய போலிக் கணக்குகளின்மூலம் வந்துள்ளதாகவும், ப்ளூ டிக் பயனர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்று கூறியுள்ளார்.
மஸ்க், இதற்கு ஆமோதித்து, நல்ல கருத்து என்று கூறி, ட்விட்டர் இதனை நடைமுறைப்படுத்தும் என்று கூறியுள்ளார்.