ஓயாத சூடான் போர்…! ஒரு வாரம் போர் நிறுத்த ஒப்பந்தம்.!
சூடானில் நடைபெற்று வரும் போரை ஒரு வாரத்திற்கு நிறுத்திவைக்க ராணுவமும், துணை ராணுவமும் ஒப்புக்கொண்டுள்ளன.
சூடான் நாட்டில் ராணுவத்துக்கும், துணை ராணுவ ஆதரவு படையினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் ஏற்பட்டு கடும் துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரங்கள் நடந்து வருகிறது. இந்த மோதலினால் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை இந்த மோதலில் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 4,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலுக்கு மத்தியில் சூடானில் சிக்கித் தவிக்கும் அந்தந்த நாடுகள் தனது மக்களை காப்பாற்ற முயன்று வரும் நிலையில், இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை இந்தியா தொடங்கியுள்ளது. இந்த மீட்புப்பணிக்கு மத்திய அரசு ஆபரேஷன் காவேரி என்று பெயரிட்டுள்ளது.
இருதரப்பும் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அதற்காகவே போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் சூடான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, மே 4 முதல் மே 11 வரை நீடிக்கும் ஏழு நாள் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான உறவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.