இனி பிரான்சிலும் இந்தியாவின் யுபிஐ சேவை..! பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு.!
இந்தியாவில் பயன்படுத்தப்படும் யுபிஐ சேவையை பிரான்சிலும் பயன்படுத்த முடியும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பாரிஸ் நேற்று சென்றடைந்தார். பாரிஸ் சென்றடைந்த பிரதமருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே விமான நிலையத்தில் வரவேற்றார்.
இதன்பின், கலை நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் பயன்படுத்தப்படும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) சேவையை, இனி பிரான்சில் பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் யுபிஐ-ஐ பயன்படுத்த இந்தியாவும் பிரான்சும் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
மேலும், வரும் காலங்களில் இந்தியாவிலிருந்து பிரான்சிற்கு சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் ஈபிள் டவரில் இருந்து யுபிஐ பயன்படுத்தி பணம் செலுத்த முடியும். இந்தியாவின் யுபிஐ அல்லது பிற டிஜிட்டல் தளங்கள் நாட்டில் ஒரு பெரிய சமூக மாற்றத்தை கொண்டு வந்துள்ளன. இந்தியாவும் பிரான்சும் இணைந்து செயல்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) என்பது இந்தியாவின் மொபைல் அடிப்படையிலான கட்டண முறை ஆகும். இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தங்கள் கையில் உள்ள மொபைல் மூலமாக பணத்தை அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.