அடுத்தடுத்த அதிரடி! “WHO வேண்டாம்…இரு பாலினத்தவர் மட்டுமே”..டிரம்ப் கையெழுத்து!
வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
வாஷிங்டன் : கடந்த ஆண்டு நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 47வது அதிபராக நேற்று (ஜனவரி 20) தனது ஆதரவாளர்களுக்கு முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் பதவியேற்கும் விழாவானது வாஷிங்டன் டிசி-யில் அரங்கிற்குள் நடைபெற்றது.
கோலாகலகமாக நடைபெற்ற இந்த விழாவில் முன்னாள் அதிபர்கள் ஜோ பைடன், பாரக் ஒபாமா என எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் , பன்னாட்டு தொழிலதிபர்களான எலான் மஸ்க், சுந்தர்பிச்சை என பலர் கலந்து கொண்டனர். அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்று கொண்டதை தொடர்ந்து சில முக்கிய விவகாரங்கள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். அதில் இரண்டு முக்கியமான விஷயங்கள் பற்றி பார்ப்போம்.
அமெரிக்காவில் இனி இரு பாலினம் மட்டுமே
அமெரிக்காவில் ஆண் – பெண் என்ற இரு பாலினம் மட்டுமே இனி அங்கீகரிக்கப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். சிறார் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு தடை செய்யப்படுவதாகவும், ராணுவத்தில் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு தடை எனவும் அதற்கான உத்தரவு கடிதத்தில் கையெழுத்திட தான் முடிவு செய்துள்ளதாகவும் டொனால்ட் டிரம்ப் பேசினார்.
WHOல் இருந்து அமெரிக்கா விலகல்
உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவு கடிதத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். கொரோனா காலகட்டத்தில் அமெரிக்காவிடம் இருந்து பெரும் பங்கு நிதியினை பெற்றுக்கொண்டு கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு பேரிடர்களை சரியாக கையாள WHO தவறிவிட்டதாக முன்னதாகவே டிரம்ப் பேசிக்கொண்டு இருந்தார். இந்த சூழலில், ஆட்சிக்கு வந்தவுடன் WHOல் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
மேலும், இது மட்டுமின்றி, வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், அமெரிக்காவில் தற்காலிக விசா வைத்திருப்பவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், பிறப்பால் அமெரிக்கர் என்ற குடியுரிமையை பெற முடியாது. அதேபோல சட்டவிரோதமாக நுழைந்தவர்களும் அமெரிக்க குடியுரிமை பெற முடியாது எனவும் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.