துப்பாக்கி கலாச்சாரத்திற்கு புதிய சட்டம்! ஜோ பைடன் அதிரடி!
2024-ம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் இதுவரை 385 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா : முன்பை விட சமீப காலத்தில் அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் என்பது வளர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் தற்போது மிக மோசமான நிலைமைக்கு அது சென்று விட்டது. குறிப்பாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த 2024-ம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் இதுவரை 385 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில், அமெரிக்க அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அதே போல் கடந்த வாரம் டொனால்ட் டிரம்ப் இருந்த இடத்தின் அருகே துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியது. அதன்பின் 2 நாட்களுக்கு முன்பு துணை அதிபரான கமலா ஹாரிஸ் தேர்தல் அலுவலகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இது போன்ற சம்பவங்கள் கடுமையான விமர்சனங்களையும் பெற்று பேசும் பொருளாகவும் மாறியது.
இப்படி இருக்கையில், ‘துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்’ என அமெரிக்க மக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். சமீபத்தில் இது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “ஒரு தேசமாக, துப்பாக்கி வன்முறையை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதனை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும்”, என்று கூறியிருந்தார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் 6 வாரங்களில் நடைபெற உள்ள சூழலில், அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர புதிய சட்டத்தை கொண்டு வரப்போவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
Today, I’ll sign an Executive Order to crack down on emerging firearm threats like unserialized, 3D-printed guns and machine gun conversion devices.
It’ll also direct my Cabinet to help improve school-based active shooter drills.
It’s our job to do better.
— President Biden (@POTUS) September 26, 2024
இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அதிகரித்து வரும் துப்பாக்கி அச்சுறுத்தல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சட்டத்தில் இன்று கையெழுத்திடள்ளேன்”, என்று பதிவிட்டுள்ளார். மேலும், இந்த தீர்மானம் வரவிற்கும் அமெரிக்க தேர்தலில் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது. மேலும், இன்று அல்லது நாளைக்குள் துப்பாக்கி தடை சட்டத்திற்கு ஜோ பைடன் கையெழுத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.