புதிதாக வருகிறது பாலியல் அமைச்சகம்? மக்கள் தொகையை அதிகரிக்க ரஷ்யா திட்டம்.!
குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை நிவர்த்தி செய்வதற்கான 'பாலியல் அமைச்சகம்' திட்டத்தை ரஷ்யா பரிசீலித்து வருகிறது.
ரஷ்யா : ரஷ்யாவில் குறைந்து வரும் மக்கள் தொகையை சமாளிக்க புதிய அமைச்சகம் அமைக்க திட்டமிட்டு வருகிறார்கள். அதாவது,மூன்று ஆண்டுகளாக உக்ரைனுடன் போரிட்டு வரும் ரஷ்யா, மிகப்பெரிய உயிரிழப்புகளை சந்தித்துள்ளதுடன், அந்நாட்டின் மக்கள் தொகையும் வேகமாக குறைந்து வருகிறது.
இந்தியாவை விட 5 மடங்கு பெரிய நாடான ரஷ்யாவில் வெறும் 14 கோடி தான் மக்கள்தொகை. இந்நிலையில், குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக பாலியல் அமைச்சகத்தை (Sex Ministry) கொண்டு வர ரஷ்ய அரசு பரிசீலினை செய்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவின் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கும், புதிய தம்பதிகளுக்கு குழந்தைகளை பெற்றுக் கொள்வதற்கும் ஏற்றவாறு ஊக்கத்தை உருவாக்குவது இந்த அமைச்சகத்தின் பணியாக இருக்குமாம்.
அதில், முக்கிய முயற்சிகளில் குடும்பங்களுக்கான நிதி ஊக்கத்தொகை, கருவுறுதல் ஆதரவு மற்றும் பொது பிரச்சாரங்கள் ஆகியவை அடங்கும். மேலும், கணவன் – மனைவி இடையே நெருக்கத்தை ஏற்படுத்துவதற்காக இரவு 10 மணி முதல் 2 மணி வரை இன்டர்நெட் சேவையை ரத்து செய்யவும், ஆண் பெண் டேட்டிங்-க்கு பணம் வழங்கவும் அரசு பரிசீலிப்பதாக தெரிகிறது.
இதற்கிடையில், மாஸ்கோவின் முக்கிய அதிகாரிகள் பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை ஆய்வு செய்து வருகின்றனராம். அதாவது, பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் குறிப்பாக பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் பற்றிய விரிவான கேள்வித்தாள்களுடன் கருத்து கேட்டு வருகிறார்களாம்.
அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கத் தவறியவர்கள் மருத்துவர் சந்திப்புக்கு அழைக்கப்பட்டு, அங்கு அவர்களிடம் அதே கேள்விகள் கேட்கப்படுவதாக கூறுகின்றனர். அதில், பெண் எப்போது பாலுறவில் ஈடுபடுகிறாள், கருத்தடை பயன்பாடு, கருவுறாமை மற்றும் கர்ப்பகால வரலாறு உள்ளிட்ட கேள்விகள் அந்த கேள்வி தாளில் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
ரஷ்ய அரசு பரிசீலினை செய்ததில், நிதி ஊக்கத்தொகையும் அடங்கும். அதாவது, உறவுகளை மேம்படுத்துவதற்காக வீட்டிலேயே முடங்கி இருக்கும் பெண்களுக்கு, ஊதியம் வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.
சொல்லப்போனால், திருமணமான பெண் வீட்டில் இருக்கிறார் என்றால், அவர் குடும்பத்தை பேணி பராமரிக்கிறார் என்பதாக அர்த்தம். அதுவும் ஒரு உழைப்புதானே. எனவே அதற்கு மதிப்பு அளித்து அவரது பணிக்காக மாதம் ரூ.5000 வரை வழங்க திட்டமிட்டுள்ளனர்.
மேலும், குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு மாதம் ரூ.26,000 வரை வழங்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இது தவிர, புதியதாக திருமணமானவர்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்ள விருப்பம் இருந்தால் போதும், அவர்களுக்கான ஹனிமூன் செலவுகளை ரஷ்ய அரசே செய்து கொடுக்குமாம். இவ்வாறு குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை நிவர்த்தி செய்வதற்கான பல்வேறு முயற்சிகளை ரஷ்யா பரிசீலித்து வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.