“ஹமாஸ் உடன் போர் நிறுத்தம் இல்லை!” புது கண்டிஷன் போட்ட இஸ்ரேல் பிரதமர்!
ஹமாஸ் தரப்பில் இருந்து விடுவிக்கப்படும் பணைய கைதிகளின் விவரங்களை வெளியிடும் வரை போர் நிறுத்தம் இல்லை என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த போரை நிறுத்த கோரி பல்வேறு நாட்டு தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். அமெரிக்கா, கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் இரு தரப்புக்கும் இடையே மத்தியஸ்தலத்திலும் ஈடுபட்டன.
இதனை அடுத்து கடந்த புதன்கிழமை இரு அமைப்புகளும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன என கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தனி அறிவித்தார். இன்று (ஜனவரி 19) முதல் 6 வாரங்கள் இந்த போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்றும், அப்போது ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் என இரு தரப்பும், தங்களிடம் உள்ள பணய கைதிகளை விடுவிப்பதாக கூறினர். அதன்படி, ஹமாஸ் 33 பணய கைதிகளையும், இஸ்ரேல் ராணுவம் 1,890 பணய கைதிகளையும் இன்று முதல் விடுவிப்பதாக இருந்தது.
ஆனால், இதுவரை ஹமாஸ் அமைப்பு விடுவிக்கும் 33 பணயக்கைதிகளை பற்றிய விவரத்தை வெளியிடாமல் உள்ளது. 33 பேர் அடங்கிய பட்டியல் இஸ்ரேல் நாட்டு ஊடகங்களில் வெளியானாலும், அது ஹமாஸ் தரப்பில் இருந்து உறுதியாக அறிவிக்கப்படவில்லை. அதிலும் இன்று முதற்கட்டமாக 3 பணயக் கைதிகள் விடுவிக்கப்பட உள்ள நிலையில், அவர்கள் விவரம் மற்றும் அவர்கள் காசா நகரில் எந்த பகுதியில் விடுவிக்கப்படுவார்கள் என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.
இதனை குறிப்பிட்டு, ஹமாஸால் விடுவிக்கப்படும் பணயக்கைதிகளின் பட்டியலைப் அந்த அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரையில் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை செயல்படுத்தாது என்றும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதை இஸ்ரேல் பொறுத்துக் கொள்ளாது என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பு வெளியான புதன் கிழமை முதல் காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தியது எனவும், இந்த வான்வழி தாக்குதலில் இதுவரை 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஹமாஸ் தரப்பு கூறுகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி இன்று மாலை முதல் பணையகைதிகள் இரு தரப்பில் இருந்து விடுக்கப்டுவர் என்றும், ஹமாஸ் அமைப்பில் இருந்து 3 பெண் பணய கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் எந்த பகுதியில் விடுக்கப்படுவார்கள் என்பது தெரியவில்லை என்பதால், வடக்கு, மத்திய , தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் காத்துகொண்டிருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதற்குள் ஹமாஸ் அமைப்பு பட்டியலை வெளியிடுகிறதா? அல்லது போர் நிறுத்தத்தை இஸ்ரேல் வாபஸ் பெற்று மீண்டும் ஹமாஸ் மீது போர் தொடுக்க போகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.