நவாஸ் ஷெரீப் அறிவுத்திறன் குறைந்த தலைவர்.! சிறையில் இருந்து இம்ரான் கான் பேச்சு.!
பாகிஸ்தான் நாட்டில் பல்வேறு அரசியல் மாற்றங்கள், பரபரப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் நாடாளுமன்ற தேர்தல் ஒரேகட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது . மொத்தமுள்ள 336 நாடாளுமன்ற தொகுதிகளில் 60 தொகுதி பெண்களுக்காவும், 10 தொகுதி சிறுபான்மையினருக்கும் ஒதுக்கப்படும். மீதம் உள்ள 266 தொகுதிகளுக்கு பொதுவான தேர்தல் நடைபெற்றது.
இதில் நேற்று முதல் வாக்கு எண்ணிக்கை வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இம்ரான் கான் பல்வேறு வழக்குக்களில் தண்டனை பெற்று சிறையில் இருப்பதால் அவரின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி சின்னம் பேட் முடக்கப்பட்டது. இதனால் அவர் ஆதரவு வேட்பாளர்கள் வெவ்வேறு சின்னத்திலும், சுயேட்சையாகவும் நின்றனர்.
பாகிஸ்தான் தேர்தலில் தனது கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றதாக நவாஸ் ஷெரீப் அறிவிப்பு
இந்த தேர்தல் முடிவுகள் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. இதுவரையில், இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் 97 இடங்களிலும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பாக்கிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர்கள் 72 இடங்களிலும் , பாகிஸ்தான் மக்கள் கட்சி வேட்பாளர்கள் 52 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்ற பரபரப்பு பாகிஸ்தானில் நிலவி வருகிறது.
இந்நிலையில் தான் சிறையில் இருக்கும் இம்ரான் கான் AI (செயற்கை நுண்ணறிவு திறன்) மூலம் வீடியோ வாயிலாக பேசினார். வெற்றி பேச்சு என குறிப்பிட்டு அந்த உரையை நிகழ்த்தியுள்ளார். அதில், எனது அன்புக்குரிய பாகிஸ்தான் நாட்டுமக்களே, அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களித்து உங்கள் ஜனநாயக கடமையை நீங்கள் ஆற்றியதன் மூலம் குடிமக்களாகிய நீங்கள் அளித்த உரிமைகளை பயன்படுத்துவதற்கும், சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கான அடித்தளத்தை நீங்கள் கட்டமைத்துள்ளீர்கள்.
தேர்தலில் நாங்கள் சிறப்பாக வெற்றிபெற உதவிய உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். வாக்களிப்பதில் முழு நம்பிக்கை வைத்து அதிக எண்ணிக்கையில் வந்து நீங்கள் வாக்களித்து உள்ளீர்கள். என் நம்பிக்கைக்கு ஏற்ப நீங்கள் நடந்துகொண்டீர்கள், தேர்தல் நாளில் அதிக அளவில் வாக்களித்தது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளீர்கள். தனது கட்சி 30 இடங்களில் பின் தங்கியிருந்த போதிலும் வெற்றி உரையை வழங்கிய அறிவுத்திறன் குறைந்த தலைவராக உள்ளார் நவாஸ் ஷெரிப். என்றும் தனது AI உரையில் இம்ரான் கான் தெரிவித்தார்.
நேற்று தனது கட்சி பெரும்பான்மை இடத்தில் வெற்றி பெற்றதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் உரை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி அதிகாரபூர்வமகாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.