பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!
அமெரிக்க கூட்டாட்சி பணியாளர்கள், கடந்த ஒரு வார காலமாக என்னென்ன பணிகள் செய்தார்கள் என்பதை குறிப்பிட வேண்டும் என மஸ்க் ஊழியர்கள்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர பிரச்சாரமும், தேர்தல் பிரச்சார நிதி உதவிகளும். டிரம்ப் அதிபரான பிறகு அமெரிக்க அரசாங்க பணபரிவர்தனைகளை கட்டுப்படுத்தும் DOGE எனும் அமைப்பின் தலைவராக உலக பணக்காரரான எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார். இதற்கு சில எதிர்ப்புகள் எழுந்தாலும் அந்த பொறுப்பில் அடுத்தடுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
டிரம்பிற்கு மிக நெருக்கமாக அமெரிக்க அரசு செயல்பாட்டில் ஈடுபட்டு வரும் மஸ்க், கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்க அரசு கூட்டாட்சி (Federal) ஊழியர்களுக்கு ஓர் மின்னஞ்சலை அனுப்பினார். அதில், ஊழியர்கள் முந்தைய வாரத்தில் செய்த முக்கிய அரசு பணிகளை புல்லட் பாய்ண்டுகளுடன் குறிப்பிட்டு பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
நேற்று (திங்கள்) 11.59 மணிக்குள் இதற்கான பதிலை அனுப்ப வேண்டும் என்றும் இல்லையென்றால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டாட்சி அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதில் அளிக்கவில்லை என்றால் பணிநீக்கம் செய்யப்படுவீர்கள் என்றும் அச்சுறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் டிரம்ப் அறிவுறுத்தலின் பெயரில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. அதாவது அரசாங்க செலவுகளை குறைக்க கூட்டாட்சி ஊழியர்களின் செயல்பாடுகளை கண்காணித்து அதில் சிறப்பாக செயல்படாத ஊழியர்களை சஸ்பெண்ட் அல்லது பணிநீக்கம் செய்ய கூறியதாக கூறப்படுகிறது. அதன் பெயரில் தான் மஸ்க் இப்படியான அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
மஸ்க்கின் இந்த செயல்பாடுகள் ஊழியர் சங்கங்கள், அமெரிக்க காங்கிரசில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் மற்றும் ஏன் குடியரசுக் கட்சி சார்பு மாவட்டங்களில் உள்ள மக்களிடமிருந்து கூட எதிர்ப்புகளைப் பெற்றுள்ளன. திங்கள் கிழமை வார விடுப்பில் உள்ள ஊழியர்கள் எப்படி மஸ்க் உத்தரவுக்கு கட்டுப்பட்டு பதில் அனுப்ப முடியும் என்றும், சில கூட்டாட்சி அதிகாரிகள் குறிப்பிட்ட பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பணிகளை மேற்கொள்வதால் அவர்களும் பதில் அளிப்பதில் இருந்து விலக்கு கோரியுள்ளனர். எலான் மஸ்கின் இந்த உத்தரவு குறித்தும், இதனால் அடுத்து மேற்கொள்ளப்பட இருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் அடுத்தடுத்த செய்திகளில் காணலாம்.