200 பேர் பலி! காசாவில் என்ன நடக்கிறது? போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதா இஸ்ரேல்?
போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவுற்றதை அடுத்து காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

காசா : இஸ்ரேல் ராணுவம் – ஹமாஸ் அமைப்பு போரானது சுமார் 17 மாதங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் ராணுவத்தை அழிக்க இஸ்ரேல் ராணுவம் காசா நகர் மீது நடத்திய தாக்குதலில் இதுவரை 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சி மேற்கொண்டன.
அமெரிக்கா தலையீட்டினால் கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதியன்று இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இருதரப்பு இடைக்கால போர்நிறுத்தம் தொடங்கியது. சுமார் 6 வாரம் இந்த போர் நிறுத்தம் அமலில் இருந்தது. மார்ச் முதல் வாரத்துடன் இடைக்கால போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. இதனை அடுத்து இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை மீண்டும் தொடங்கியுள்ளது.
கடந்த சனிக்கிழமை (மார்ச் 15) காசாவின் வடக்கு பகுதியிலுள்ள பீய்ட் லஹியாவில் வான்வெளி தாக்குதலை முதலில் தொடங்கியது. இதில் சுமார் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு வான்வெளி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தொடங்கிவிட்டது. அதன் பிறகு தெற்கு மற்றும் மத்திய காசா பகுதியில் உள்ள மவாரி, கான் யூனிஸ், அல் தராஜ், ராஃபா உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் டிரோன் தாக்குதலை தொடர்ந்துள்ளது.
இந்த வான்வெளி தாக்குதலில் பெண்கள் , குழந்தைகள் உட்பட சுமார் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பிறகு இஸ்ரேல் ராணுவம் நடத்திய மிக பெரிய தாக்குதல் இதுவாகும். இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் மட்டுமல்லாது சிரியா, லெபனானின் பல்வேறு பகுதிகளிலும் தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் போர் ஏன்?
போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் விதிமுறையில் ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் ராணுவம் காசா நகரில் இருந்து முழுதாக வெளியேற வேண்டும் என்றும், இஸ்ரேல் வசம் உள்ள பணய கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாகவும், அதனை இஸ்ரேல் ராணுவம் ஏற்க மறுத்தது என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதலை தொடர்ந்துள்ளது.
பணய கைதிகளை விடுவிக்க மறுப்பது மற்றும் அனைத்து போர்நிறுத்த ஒப்பந்தங்களையும் ஹமாஸ் நிராகரிக்கிறது என பல்வேறு செயல்களில் அவர்கள் ஈடுபட்டதால் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதுவரை..,
கடந்த ஜனவரி 19ஆம் தேதி முதல் 6 வாரங்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலாகியது. மார்ச் முதல் வாரத்தோடு முடிவடைந்த இதனை ஏப்ரல் வரை நீடிக்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது. அதனை இஸ்ரேல் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த 6 வார போர் காலத்தில் 36 இஸ்ரேல் பணய கைதிகளும், 2000 பாலஸ்தீனியர்களும் விடுக்கப்பட்டுள்ளனர். இன்னும் 60 இஸ்ரேல் பணய கைதிகள் ஹமாஸ் வசம் உள்ளனர் என கூறப்படுகிறது.
இந்த 6 வார போர் நிறுத்தம் இறுதிக்கட்டத்தை எட்டிய போதே இந்த மாத தொடக்கதிலேயே காசா நகருக்குள் வரும் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் வரவு அனைத்தையும் நிறுத்திவிட்டது இஸ்ரேல் என்பது குறிப்பிடத்தக்கது.