தவறான தீர்ப்பு., கால்பந்து போட்டியில் கலவரம்! 100 பேர் உயிரிழப்பு?
கினியா நாட்டில் உள்ளூர் கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.
கினியா : மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியா நாட்டில் கடந்த 2021இல் இருந்து ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ராணுவ தளபதி மமதி டூம்பூயா அதிபராக தான்னை அறிவித்து ஆட்சி செய்து வருகிறார். அடுத்த வருடம் இங்கு மீண்டும் தேர்தல் நடைபெறும் என கூறப்படுகிறது.
இப்படியான சூழலில், ராணுவ தளபதி மமதி டூம்பூயா பெயரில், கினியாவின் மிக பெரிய நகரங்களில் ஒன்றான N’Zerekore எனும் ஊரில் கடந்த ஞாயிறன்று உள்ளூர் கால்பந்து போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் இரு உள்ளூர் அணிகள் மோதின. அப்போது நடுவர்கள் தவறான தீர்ப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த தவறான தீர்ப்பால் இரு உள்ளூர் அணிகளுக்கான ரசிகர்களும் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மோதிக்கொண்டனர். இந்த மோதலில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கலாம் என AFP செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. சமூக வலைதள பதிவில் வெளியான வீடியோ தகவலின்படி, மைதானத்திற்கு வெளியே, உள்ளே என பலரது சடலங்கள் இருந்ததாக AFP செய்தி வெளியிட்டுள்ளது. மேற்கண்ட ஊரில் உள்ள காவல் நிலையத்தையும் சிலர் அடித்து நொறுக்கினர்.
இந்த, கலவரத்தில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என தெரியவில்லை என்றும், அந்நாட்டு மருத்துவர்கள் கூற்றுப்படி, மருத்துவமனை முழுக்க சடலங்களால் நிரம்பியுள்ளது என்றும், பிணவறை நிரம்பியுள்ளது என்றும், நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த கலவரத்தில் உயிரிழந்திருக்க கூடும் என்றும் AFP செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது அங்கு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதால் உறுதியான உயிரிழப்பு எண்ணிக்கைகள் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.