கொரோனவை தொடர்ந்து அச்சுறுத்தும் குரங்கு அம்மை…! அவசர கூட்டத்தை கூட்டிய WHO…!
ஐரோப்பாவில் 100 நபர்களுக்கு மேல் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமை என்று உடனடியாக அவசர கூட்டத்தை கூட்டி உள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், கொரோனாவை தொடர்ந்து தற்போது குரங்கு காய்சசல் என்ற தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது.
குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நாடுகள்
இந்த தொற்று பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து உள்ளிட்ட 9 நாடுகளில் மிகப்பெரிய அளவில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் குரங்கு காய்ச்சலால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பாவில் 100 நபர்களுக்கு மேல் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமை என்று உடனடியாக அவசர கூட்டத்தை கூட்டி உள்ளது.
குரங்கு காய்ச்சல் அறிகுறி
குரங்கு காய்ச்சலின் அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, சருமத்தில் அரிப்பு போன்றவை கூறப்படுகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் போது நோய் தொற்று பரவும் என்றும், இருமும்போதும் வெளிப்படும் எச்சில் மூலமாகவும், உடல் திரவங்கள் மூலமாகவும் மிக அருகில் இருப்பவர்களுக்கு தொற்று பிறப்பதற்கு வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.
இந்த தொற்றானது முதலில் குரங்கிடம் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது மனிதர்களிடம் பரவ தொடங்கியுள்ளது. இது கொரோனாவை போல் அல்லாமல் , இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடம் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கு தான் பரவுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசி இல்லை
ராபர்ட் கோச் நிறுவனத்தைச் சேர்ந்த ஃபேபியன் லீண்டர்ட்ஸ் இதுகுறித்து கூறுகையில், இந்த தொற்று நோய் நீண்ட காலம் நீடிக்க வாய்ப்பில்லை. குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி, மருந்துகள் மற்றும் பயனுள்ள தடுப்பூசிகள் தேவைப்பட்டால் பயன்படுத்தலாம்.
இந்த காய்ச்சலுக்கு குறிப்பிட்ட தடுப்பூசி இல்லை. ஆனால் உலக சுகாதார அமைப்பின் படி பெரியம்மை நோயை ஒழிக்க பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகள் குரங்கு காய்ச்சலுக்கு எதிராக 85% வரை பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.