1971இல் குலைநடுங்க வைத்த வங்கதேச கோர நிகழ்வுகள்… அந்நாட்டு மக்களின் சோகப் பதிவு.!
வங்கதேசம் : இந்தியாவின் சுதந்திரம் , பாகிஸ்தான் பிரிந்து சென்ற காலத்திற்கு பின்பிருந்து, 1971க்கு முன்பு வரையில் வங்கதேசம் என்ற நாடு இல்லை. வங்கதேச நாட்டின் பெயர் கிழக்கு பாகிஸ்தான். தற்போதைய பாகிஸ்தான் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்தது வங்கதேசம்.
1971 கலவரம் :
அந்த சமயம், 1970ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானில் (வங்கதேசம்) நடைபெற்ற தேர்தலில் ஷேக் முஜ்புர் ரஹ்மான் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதை அடுத்து ‘வங்கதேசம்’ தனி நாடு கோரிக்கையை இந்தியாவின் ஆதரவோடு முன்னிறுத்தினார். இந்திய ராணுவ உதவியுடன், பாகிஸ்தானை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்று பின்னர் 1971இல் வங்கதேசம் தனி நாடானது. வங்கதேச தேசப்பிதாவாக ஷேக் முஜ்புர் ரஹ்மான் உருவெடுத்தார்.
அந்த 1971 வங்கதேச விடுதலை போராட்ட சமயத்தில்,வங்கதேச நாட்டில் இருக்க முடியாமல் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு , தங்கள் சொந்த நிலம், உடமைகளை விட்டு இந்தியாவுக்கு குடிபெயர்ந்தனர். தற்போது அதே போன்ற ஒரு நிலைமை மீண்டும் வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது
சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் :
1971 கால கட்ட அளவுக்கு கொடுமைகள் நேரவில்லை என்றாலும், தற்போதைய சூழலில் வங்கதேசத்தில் அசாதாரண நிலை தான் உள்ளது. இதனால், தற்போது ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் நாட்டை விட்டு இந்தியாவுக்கு அகதிகளாக வர முயற்சித்து வருகின்றனர். வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினர்கள் (இந்துக்கள்) மீது தாக்குதல நடைபெறுவதாகவும் செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.
இப்படியான சமயத்தில், 1971 காலகட்டத்தில் இந்தியாவில் தஞ்சம் புகுந்த வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் OneIndia செய்தி தளத்திற்கு அளித்த பேட்டியில் தாங்கள் வங்கதேச நாட்டில் இருந்து விடுதலை சமயத்தில் இந்தியா வருவதற்கு முன்னர் வங்கதேசத்தில் சந்தித்த கொடுமைகளை பகிர்ந்து கொண்டனர்.
சுஷில் கங்கோபாத்யாய் :
1971ஆம் ஆண்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்த சுஷில் கங்கோபாத்யாய் கூறுகையில், “எங்களுக்கு ஒரு பெரிய குடும்பம் மற்றும் மிகப்பெரிய அளவில் நிலங்கள் இருந்தன. ஆனால் விடுதலைப் போரின் போது, பாகிஸ்தான் ராணுவம் எங்களைத் கடுமையாக தாக்கினர். எங்கள் வீடுகள் எரிக்கப்பட்டன. பலர் கொடூரமாக கொல்லப்பட்டனர். வங்காளதேசத்தில் சமீபத்திய நிகழ்வுகளைப் பார்க்கும்போது என் மனது கனக்கிறது. கர்ப்பிணிப் பெண்ணை வயிற்றில் எட்டி உதைக்கும் காட்சிகளைப் நான் பார்த்தேன்.
தற்போது நான் ஒரு இந்தியனாக, அவர்களைக் காப்பாற்றக் கோருகிறேன். எங்கள் பூர்வீக சகோதரர்கள், இந்துக்கள் அங்கு இருக்கின்றனர். தொடர்ந்து தவறாக நடத்தப்பட்டால், வங்கதேசத்தில் போராட்டத்தை நடத்த பரிசீலிக்க வேண்டியிருக்கும். நான் இந்தியா வரும்போது எனக்கு 10 – 12 வயதுதான் இருக்கும். ராணுவ வீரர்கள் எங்களை சித்திரவதை செய்தனர். ஆண்களை கொன்று ஆற்றில் வீசினர். எங்கள் தாய்மார்கள் மீது அத்துமீறினர். பல பெண்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் வன்புணர்வு செய்தனர். இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் அந்த வடுக்கள் அப்படியே இருக்கின்றன.” என அந்த சோகத்தை நினைவூட்டினார் சுஷில் கங்கோபாத்யாய்.
அனிமா தாஸ் :
வங்காளதேசத்தை விட்டு இந்தியாவுக்கு குடியேறிய அனிமா தாஸ் தன்னுடைய சோக நிகழ்வை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், “என் மகன் சிறுவனாக இருந்தான். என் மகள் என் வயிற்றில் இருந்தாள். 1971இல் நாடு மோதலில் மூழ்கியது. வீடுகள் எரிக்கப்பட்டன. பயத்தில், என் மாமனார் எங்களை இந்தியாவுக்கு அனுப்பினார். அதன் பிறகு நான் பங்களாதேஷுக்கு சில முறை சென்றிருக்கிறேன், ஆனால் மீண்டும் அங்கு வசிக்கும் எண்ணத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ” எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த பல நபர்கள் இதேபோன்ற உணர்வுகளை எதிரொலித்தனர். பலர் தங்கள் மூதாதையர் வீடுகளையும் நினைவுகளையும் விட்டுவிட்டு மதத் பாகிஸ்தான் ராணுவ துன்புறுத்தலுக்கு பயந்து இந்தியாவுக்கு தப்பி ஓடிவிட்டனர். நாட்டை விட்டு வெளியேறியது மனதிற்கு வலியை தந்தாலும், இந்தியா அளிக்கும் பாதுகாப்பு மற்றும் நிவாரணம் எங்களை என்றும் நன்றி உணர்வுடன் இருக்க வைக்கிறது. வங்கதேசத்தில் தற்போதுள்ள இந்துக்களுக்கு ஒரு அறிவுரை, வங்கதேசத்தில் பாதிக்கப்படும் நபர்கள் உடனடியாக இந்தியாவில் தஞ்சம் அடைய வேண்டும் என அனிமா தாஸ் கூறினார்.
பரேஷ் தாஸ் :
1956 இல் இந்தியா வந்த பரேஷ் தாஸ் கூறுகையில், ” என் தாத்தா என் கண் முன்னாலேயே வெட்டிக் கொல்லப்பட்டார். பயத்தில் எங்கள் நிலத்தை விட்டுவிட்டு இந்தியா வந்துவிட்டோம். என் உறவினரை என் முன்னாலேயே அவர்கள் தாக்கினர். நாங்கள் இப்போது இந்தியாவில் நிம்மதியாக வாழ்ந்தாலும், நோகாலியில் உள்ள உறவினர்கள் இன்னும் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு, நிலத் தகராறில் என் மாமா கொல்லப்பட்டார் என்று பரேஷ் தாஸ் குறிப்பிட்டார்.
ரஷோமோய் பிஸ்வாஸ் :
மேற்கு வங்கம் நியூ டவுனுக்கு அருகில் வசிக்கும் வங்கதேச பூர்வீககுடியான ரஷோமோய் பிஸ்வாஸ் கூறுகையில், ” வங்கதேசத்தில் இந்துவாக இருப்பது ஒரு குற்றம். சுதந்திரத்திற்குப் பிறகும், ஓய்வு கிடைக்கவில்லை. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஜமாத் படைகள் எங்களை (இந்துக்கள்) குறிவைத்து, எங்கள் வீடுகளை குறிவைத்து தாக்கினர்.
மேலும் அவர் கூறுகையில், ” எனது குடும்பத்தினர் இரவு நேரங்களில் உணவு இல்லாமல் தலைமறைவாக இருந்தனர். நாங்கள் இப்போது இந்தியாவில் நிம்மதியாக வாழும் போது, எங்கள் உறவினர்கள் பலர் வங்கதேசத்தில் இருக்கிறார்கள். இந்திய அரசு தலையிட்டு, அங்குள்ள இந்துக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். என ரஷோமோய் பிஸ்வாஸ் கூறினார்.