மியான்மர், தாய்லாந்தில் பயங்கர நிலநடுக்கம்… சுக்குநூறாய் நொறுங்கிய கட்டிடங்கள்.!
மியான்மரில் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் தாய்லாந்தின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.

பாங்காக் : மியான்மரை தொடர்ந்து தாய்லாந்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மியான்மரில் இன்று காலை 11:50 மணியளவில் முதல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி மியான்மரின் தலைநகரான நைபியிடாவிலிருந்து வடகிழக்கே அமைந்துள்ள சகாய்ங் பகுதியிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில், பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, 12 நிமிட இடைவெளியில் மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது. மத்திய மியான்மரின் மோனிவா பகுதியை மையமாகக் கொண்டு இது பதிவாகியுள்ளது. மேலும், இதற்கு இடையே 6.9 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் காரணமாக கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். மியான்மரைத் தொடர்ந்து, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் 7.3 ஆக பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக, பாங்காங்கில் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று நிலநடுக்கத்தால் தரைமட்டமானது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடம் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது. இதனால், இதில் பலர் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது
மேலும், இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டை நாடுகளான இந்தியா வட மாநிலங்களிலும், வங்கதேசம், சீனா, லாவோஸ் மற்றும் தாய்லாந்து ஆகியவற்றிலும் உணரப்பட்டது.