மாஸ் காட்டிய என்விடியா ..! ஆப்பிள், மைக்ரோசாப்ட்டை ஓரம்கட்டி அசத்தல் ..!
என்விடியா (Nvidia): அமெரிக்கப் பங்குச்சந்தையில் டெக் நிறுவனங்கள் கடந்த திங்கள்கிழமை அன்று புதிய உச்சத்தைத் தொட்டது. இதனால் நேற்றைய (ஜூன்-19) நாளின் வர்த்தகத்தின் முடிவில் உலகின் முதல் 10 நிறுவனங்களின் பட்டியலில் பெரிதளவு மாற்றம் என்பது ஏற்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக உலகின் தலைசிறந்த கம்பெனியாக ஆப்பிள் நிறுவனம் இருந்து வந்தது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மைக்ரோசாப்ட் & ஆப்பிள் நிறுவனம் இரண்டும் மாறி மாறி முதல் இடம் 2-ஆம் இடம் பிடித்து வந்தனர். இதுவே இந்த 2 நிறுவனங்களுக்கு இடையே ஒரு பெரிய பனிப்போர் நிலவுவதற்கு காரணமாகவும் அமைந்தது.
இந்நிலையில், நேற்று முடிந்த வர்த்தகத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு என்விடியா நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 3.3 டிரில்லியன் டாலர் அளவீட்டைத் தாண்டி புதிய உயர்வைத் தொட்டு சாதனை படைத்தது. இதற்கு மிக முக்கிய காரணம் அமேரிக்க பங்குசந்தையில் முதலீட்டாளர்களின் அதிகப்படியான ஆதரவே ஆகும்.
டெக் உலகில் கோலூன்றி நின்று கொண்டிருக்கும் என்விடியா நிறுவனம், கடந்த 5 வருடத்தில் மட்டும் டெக் உலகில் மிக தீவிரமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதாவது என்விடியா இல்லை என்றால் டெக் உலகில் எதுவுமே நடக்காது என்பதற்கு ஏற்ப ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. அதிலும் மிக முக்கிய குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் செயற்கை நுண்ணறிவின் (Artificial Intellegence – AI) பயன்பாடு அதிகரித்த பிறகு என்விடியாவின் சிப் டிமாண்ட் பெரும் டிமாண்டில் இருந்து வருகிறது.
ஒரு வருடத்திற்கு முன்பு, என்விடியா நிறுவனத்தின் சந்தை மதிப்பு வெறும் 1 டிரில்லியன் டாலராகவே இருந்து வந்தது. ஆனால், இந்த ஏஐ மூலம் மட்டுமே கடந்த ஒரு வருடத்தில் சந்தை மதிப்பு 200% சதவீதம் அதிகரித்துள்ளது. நேற்று (ஜூன்-18,2024) நடந்து முடிந்த இந்த வர்த்தக நாள் முடிவில் என்விடியா நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 3.334 டிரில்லியன் டாலர்கள் ஆகும்.
இது மைக்ரோசாப்ட்-ன் மொத்த மதிப்பான 3.317 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டைக் காட்டிலும் அதிகமானது ஆகும். இதன் காரணமாக கொடி கட்டி பரந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தை 2ம் இடத்திற்கும் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தை (3.286 டிரில்லியன் டாலர்) 3-வது இடத்திற்கும் தள்ளியுள்ளது. இதற்கு ரீடைல் முதலீட்டாளர்கள் என்விடியா நிறுவனத்திடம் அதிகப்படியான பங்குகளை வாங்கியதன் காரணமாக தான் என்விடியா சந்தை மதிப்பு தற்போது 3.334 டில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.