உலகின் விலையுயர்ந்த பழங்கள்..!அதற்கு மசாஜ் செய்யும் விவசாயிகள்…!
மலேசியாவில் உள்ள விவசாயிகள்,செயற்கை உரங்கள் பயன்படுத்தாமல் பழங்களுக்கு மசாஜ் செய்தும் பின்னர் பாடல்களை ஒலிக்கவிட்டும், முலாம் பழங்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
மலேசியாவில் உள்ள மோனோ பிரீமியம் என்ற தனியார் நிறுவனம்,உலகின் மிக விலையுயர்ந்த பழங்களில் ஒன்றான ஜப்பானிய முலாம்பழங்களை வெற்றிகரமாக மலேசியாவில் வளர்ப்பதற்காக அப்பழங்களின் வளர்ச்சி பற்றி அறிய மூன்று விவசாயிகளை ஜப்பானுக்கு அனுப்பியது.
இதனையடுத்து,அந்த மூன்று மலேசிய விவசாயிகளும் பழத்தை வளர்ப்பதற்கான ரகசியங்களை கண்டுபிடித்ததாக தெரிவித்தார்கள். அதாவது,ஜப்பானிய முலாம்பழங்களை வளர்ப்பதற்கு அதிக விலை கொண்ட ரசாயன உரங்கள் தேவைப்படாது என்றும் அதற்கு பதிலாக நல்ல கிராமிய இசை மற்றும் மசாஜ் செய்யும் முறையே தேவைப்படும் என்றும் விவசாயிகள் கூறினார்கள் .இதனைத் தொடர்ந்து,மோனோ நிறுவனத்தின் விவசாயிகள் மலேசியாவின் புட்ரஜாயா பகுதியில் முலாம்பழங்களை சாகுபடி செய்து வந்தனர்.
அதன் பின், விவசாயிகள் ஒரு மென்மையான துணி அல்லது கையுறை அணிந்து தினமும் முலாம்பழங்களுக்கு மசாஜ் செய்தார்கள்.இந்த செயல்முறை “தமா-ஃபுகி” என்று அழைக்கப்படுகிறது,இதனால் பழத்தின் சுவை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.மேலும் விவசாயிகள்,பழங்களுக்கு மத்தியில் சில கிராமிய இசைப் பாடல்களையும் போட்டு,இப்பாடல்கள் முலாம்பழங்களின் வளர்ச்சியைத் தூண்ட உதவும் என்றும் தெரிவித்தார்கள்.
தொடர்ச்சியான பரிசோதனைகளுக்குப் பிறகு மலேசிய விவசாயிகள், இறுதியாக தங்களின் முலாம்பழங்களை சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்துள்ளார்கள்.
ஜப்பான் நாட்டுடன் ஒப்பிடும்போது,மலேசியாவில் வளர்ந்த முலாம் பழங்கள் தலா 168 ரிங்கிட் (அதாவது,40.70 டாலர் அல்லது ரூ.3,035) விலைக்கே ஆன்லைனில் விற்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.