ஹமாஸை ஒழிக்க இரும்பு கரமாக இணைந்து செயல்படுவோம்.! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
கடந்த அக்டோபர் 7ம் தேதி சனிக்கிழமையில் இருந்து இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே போர் நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இருக்கும் ஹமாஸ் அமைப்பு ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது செலுத்தி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு 18 நாட்களாக இஸ்ரேல் ராணுவம் பதில் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
மேலும், இஸ்ரேல் வான்வெளி மற்றும் தரைவழி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. இதனால் காஸா பகுதியில் இருக்கும் பாலஸ்தீன மக்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே நடைபெற்று வரும் போரில், இரு தரப்பிலிருந்தும் குழந்தைகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இதில் பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலில் பெரும்பாலும் காஸாவில் இருக்கும் பாலஸ்தீன மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில், குறைந்தது 4,137 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 12,065 மக்கள் காயமடைந்து உள்ளனர். அதோடு காசாவில் 1,688 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி ஆகியோர் இணைந்து ஹமாஸை ஒழிப்பதற்கான ஆலோசனையில் ஈடுபட்டனர். அதில் ஹமாஸை ஒழிப்பதற்காக நாங்கள் ஒரு இரும்பு கரமாக இணைந்து செயல்படுகிறோம் என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
அவர் கூறுகையில், “நாங்கள் எங்கள் வீரர்கள் மற்றும் எங்கள் தளபதிகளை ஒருவரையொருவர் ஆதரிக்கிறோம். இஸ்ரேல் குடிமக்கள் வேறு ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நாங்கள் போர் குறித்த முடிவுகளை ஒருமனதாக எடுக்கிறோம். இதை நாங்கள் மிகுந்த பொறுப்புடன் செய்கிறோம். ஆழ்ந்த விழிப்புணர்வுடன் செய்கிறோம். நாங்கள் ஒன்றாக போராடுகிறோம், ஒன்றாக வெல்வோம்.” என்று கூறினார்.