லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஏவப்பட்ட 200 ராக்கெட்டுகள்! 500-ஐ நெருங்கும் உயிரிழப்பு!
லெபனான் நாட்டில் நடந்த தாக்குதலில் இதுவரை குழந்தைகள், பெண்கள் உட்பட 490-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
லெபனான் : ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து லெபனான் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் ராக்கெட் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 492 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் 200-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி இஸ்ரேலை தாக்கியுள்ளனர். இஸ்ரேலின் ராணுவ விமானப்படை இடங்களை குறிவைத்தே இந்த ராக்கெட்டுகளை ஏவியதாக ஹிஸ்புல்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், ஹிஸ்புல்லாக்களின் ஆயுதக் கிடங்குகள் அமைந்துள்ள தெற்கு மற்றும் கிழக்கு லெபனானில் மட்டுமே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல், காசா மீது கடும் தாக்குதலை நடத்தி வருகிறது.
சர்வதேச அளவில் பல அழுத்தங்கள் இருந்தாலும் ஹாமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்கும் வரை இந்த தாக்குதலை நிறுத்த மாட்டோம் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், பாலஸ்தீன நாட்டுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஈரான் நாட்டின் ஆதரவை கொண்ட ஹிஸ்புல்லாக்களையும் எதிர்த்து லெபனான் நாட்டின் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் தெற்கு, கிழக்கு லெபனானில் கடும் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் தெற்குப் பகுதியில் துறைமுக நகரான சிடோனில் இருந்து மக்கள் குடும்பமாக கையில் கிடைக்கின்ற உடைமைகளுடன் வேறு இடம் நோக்கி நகரத் தொடங்கியுள்ளன.
ஒரு சிலர் தலைநகர் பெய்ரூட் நோக்கி மக்கள் பெயர்ந்து வருகின்றனர். இப்படி நடைபெற்று வரும் இந்த தாக்குதல்களால் உலகம் முழுவதும் போர் பதற்றம் நிலவி வருகிறது.