நான் அதிபரானால்.., கமலா ஹாரிஸ் வெளியிடும் அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கை.!

Kamala Harris

அமெரிக்கா : ஆளும் ஜனநாயக கட்சி சார்பாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் வரும் வெள்ளியன்று அமெரிக்க பொருளாதார கொள்கைக்கான பிரச்சார அறிக்கையை வெளியிட உள்ளார்.

வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரங்களில் டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸ் என இருவரும் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் ஜனநாயக கட்சி சார்பாக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர்.

மேடை பிரச்சாரங்கள், நேர்காணல்கள் என மிகத் தீவிரமாக ஈடுபட்டு வரும் டொனால்ட் டிரம்ப், அண்மையில் கூட எலான் மஸ்க் உடன் எக்ஸ் பக்கத்தில் “எக்ஸ் ஸ்பேஸ் ” நிகழ்ச்சி வரையில் கலந்து கொண்டு தனது பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி வருகிறார். கமலா ஹாரிஸ் கடந்த சில வாரங்களாக எந்தவித நேர்காணலிலும் பெரிதாக கலந்துகொள்ளாமல் இருந்து வருகிறார். இதனை குடியரசு கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இப்படியான சூழலில், கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் பிரச்சாரம் செய்யும் பொருட்டு, தான் அமெரிக்க அதிபரானால்  அமெரிக்கப் பொருளாதாரம் எப்படி இருக்கும் எனக் குறிப்பிடும் வகையில் பொருளாதார கொள்கை ஒன்றைத் தயார் செய்து அதனை அமெரிக்க நாட்டின் வட கரோலினாவில் வரும் வெள்ளிக்கிழமை வெளியிட்டு உரையாற்ற உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

கமலா ஹாரிஸ் வெளியிடும் அமெரிக்கப் பொருளாதார கொள்கை எப்படி இருக்கும் என அவரின் பிரச்சார குழு நிர்வாகிகள் கூறுகையில், அமெரிக்கப் பணவீக்கம் இதில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படும் என்றும், நடுத்தர வரக்கத்து குடும்பங்களின் செலவினங்களைக் குறைக்கும் வகையிலும், கார்ப்பரேட் நிறுவனங்களில் வரி உயர்வு பெரும் வகையிலும் கவனம் செலுத்தி பொருளாதார கொள்கை வடிவமைக்கப்பட்டு இருக்கும் என கமலா ஹாரிஸின் பிரச்சார குழுவினர் கூறியுள்ளனர்.

முன்னதாக அமெரிக்க சமையல் தொழிற்சங்க உறுப்பினர்கள் அடங்கிய தேர்தல் பிரச்சார பேரணியில் பேசிய கமலா ஹாரிஸ், நான் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், ​​நாட்டில் வேலைபார்க்கும் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவேன். உழைக்கும் மக்களுக்கான எங்கள் போராட்டத்தை என்றும் தொடர்வேன் எனப் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் கமலா ஹாரிஸ் வெளியிடப்போகும் பொருளாதார கொள்கையில் இடம்பெற்று இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்