ஒரே வாரத்தில் ரூ.1,700 கோடி.! கமலா ஹாரிஸுக்கு குவியும் நன்கொடை.!
US தேர்தல் 2024 : இந்தாண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஆளும் ஜனநாயக கட்சி சார்பாக முன்னதாக தற்போதைய அதிபர் ஜோ பைடனும் அறிவிக்கப்ட்டனர்.
ஜோ பைடனின் உடல்நிலை, பேச்சில் தடுமாற்றம் ஆகியவை சொந்த கட்சியினரையே பதட்டமடைய செய்தன. இதனால் ஜோ பைடன் தேர்தலில் இருந்து விலக்கோரி தொடர் அழுத்தங்கள் எழுந்தன. மேலும், ஜோ பைடனுக்கான தேர்தல் பிரச்சார நிதிகளும் குறைய தொடங்கின.
இதனை தொடர்ந்து ஜோ பைடன் தான் அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர், துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்கினார். ஆதற்கு முன்னர் வரையில் , டொனால்ட் டிரம்பிற்கு அதிபர் தேர்தலில் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று இருந்த நிலையில், கமலா ஹாரிஸ் வருகைக்கு பின்னர் தற்போது இருவருக்கும் சமமான வெற்றி வாய்ப்பு நிலவுவதாக அமெரிக்க செய்தி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
அதற்கேற்றாற் போல கமலா ஹாரிஸின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நன்கொடையானது கடந்த ஒரு வாரத்தில் 200 மில்லியனாக அதிகரித்துள்ளது. இது குறித்து, கமலா ஹாரிஸின் துணை பிரச்சார மேலாளர், ராப் ஃப்ளாஹெர்டி (Rob Flaherty) தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
அதில், தேர்தலுக்கு இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கமலா ஹாரிஸ் தேர்தல் பிரச்சார நன்கொடையாக 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக 1700 கோடி) கிடைக்கப்பெற்றுள்ளது என்றும், அதில் 66 சதவீதம் புதிய நன்கொடையாளர்கள் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளது என அறிவித்தார்.
மேலும், கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட பின்னர், தங்கள் தங்கள் ஜனநாயக கட்சியில் புதியதாக 1,70,000 ஆதரவாளர்கள் இணைந்துள்ளனர் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அதே போல , டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரச்சார நிதியாக இந்தாண்டு இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல் – ஜூன் ) மட்டும் 331 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைக்கப்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.